Published : 23 Jul 2020 10:19 AM
Last Updated : 23 Jul 2020 10:19 AM
கரூர் மாவட்டத்தில் போக்குவரத்துக் காவலர் உள்ளிட்ட 10 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் கரூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் மற்றும் முதல்நிலை காவலர் ஆகிய இருவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்குப் பின் கடந்த சில நாட்களுக்கு முன் பணிக்குத் திரும்பினர்.
அவர்களை காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து, சான்றிதழ் கொடுத்து வரவேற்றார். காவலர்கள் கைத்தட்டி வரவேற்பு அளித்தனர்.
கரூர் நகர போக்குவரத்துக் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணியாற்றும் காவலருக்கு நேற்று (ஜூலை 22) கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இன்று வெளியான முடிவில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, போக்குவரத்துக் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட போக்குவரத்துக் காவலர்கள் 30 பேருக்கு இன்று (ஜூலை 23) கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
மேலும், திண்டுக்கல் சாலையில் உள்ள திரையரங்கம் எதிரே உள்ள டீக்கடைக்காரருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கரோனா தொற்று உறுதியான நிலையில் எப்போதும் அந்த டீக்கடையிலேயே அமர்ந்திருக்கும், அதனருகேயுள்ள மேன்ஷனில் தங்கியிருந்தவருக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானது. இதனால் மேன்ஷனில் தங்கியுள்ளவர்களுக்கு இன்று கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
மேலும், பஞ்சமாதேவியில் மளிகை நடத்தி வருபவர், திருச்சியில் மளிகை நடத்தி வரும் தோகைமலை பகுதியைச் சேர்ந்தவர் என மாவட்டத்தில் ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT