Published : 23 Jul 2020 08:05 AM
Last Updated : 23 Jul 2020 08:05 AM

காஞ்சிபுரத்தில் கூடுதல் கடைகளை ஒதுக்க வலியுறுத்தி ராஜாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்

காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் கூடுதல் கடைகளை உருவாக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் வியாபாரிகளுக்கு கூடுதலாக கடை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வையாவூர் சாலையில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது.

காஞ்சிபுரம் நகரின் பிரதான மார்க்கெட்டான ராஜாஜி மார்க்கெட் 300 கடைகளுடன் ரயில்வே சாலை அருகே இயங்கி வந்தது. அங்கு கரோனா பரவியதைத் தொடர்ந்து மார்கெட்டை வையாவூர் சாலையில் மாற்றினர். அப்போது 100 கடைகள் குறைக்கப்பட்டதாக வணிகர்கள் புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில் மழை பெய்தபோது இந்த கடைகள் இருந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக மாறியது. இதனால், காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் வரதராஜ பெருமாள் கோயிலை தாண்டி புதிதாக மார்கெட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 147 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 120 கடைகள் ஏற்கெனவே இருந்த வியாபாரிகளுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. பழைய வியாபாரிகளுக்கு ஏற்கெனவே 100 கடைகள் குறைக்கப்பட்ட நிலையில், மேலும் கடைகள் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வையாவூர் சாலையில் போராட்டம் நடத்தினர்.

இவர்களிடம் காஞ்சிபுரம் டிஎஸ்பி மணிமேகலை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் தற்போதுள்ள 147 கடைகளையும் ஏற்கெனவே இருந்த வியாபாரிகளுக்கு ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் விடுபட்ட வியாபாரிகளுக்கு புதிய கடைகள் அமைப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x