Published : 22 Jul 2020 07:02 PM
Last Updated : 22 Jul 2020 07:02 PM
காரைக்காலில் வணிகர்களிடம் அரசுத் துறை அதிகாரிகள் சுமுகமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என காரைக்கால் 'சேம்பர் ஆஃப் காமர்ஸ்' வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் காரைக்காலுக்கு வந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, "மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து போதுமான நிதியுதவி கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் மாநில அரசு வரிப் பணத்தை நம்பி ஆட்சி நடத்த வேண்டிய நிலை இருப்பதால் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் எவ்விதத் தொல்லையும் கொடுக்காமல் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்குச் சொல்லப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார். எனினும், அதிகாரிகள் வணிகர்களிடம் சுமுகமான முறையில் அணுகுவதில்லை என வியாபாரிகள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து காரைக்கால் 'சேம்பர் ஆஃப் காமர்ஸ்' தலைவர் ஏ.முத்தையா தலைமையிலான நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவை இன்று (ஜூலை 22) நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
"கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அரசு விதித்துள்ள கரோனா நோய்த்தடுப்பு விதிமுறைகளின்படி வியாபார நிறுவனங்களை நடத்தி வருகிறோம். காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளும் மூடப்பட்டுள்ளதால் வெளிமாநில நுகர்வோரும், வாகனங்களும் காரைக்கால் மாவட்டத்துக்குள் வருவதில்லை. அதனால் நாங்கள் உள்ளூர் மக்களின் வியாபாரத்தை நம்பியே தொழில் நடத்துகிறோம். வியாபாரம் மந்த நிலையில் நடப்பதால் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்கவே சிரமமாக உள்ளது.
இன்றைய சூழலில் வியாபாரம் செய்வது லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. நம்மை மட்டுமே நம்பியிருக்கும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும், கடை வாடகை கொடுக்கவும், நகராட்சி வரி கட்டவும், வங்கிக் கடன் அசல் செலுத்தவும் மட்டுமே வியாபாரம் செய்து வருகிறோம். ஏற்கெனவே மூன்று மாத கால ஊரடங்கில் ஊழியர்களுக்கு முழுச் சம்பளம் அரசு ஆணைப்படி வங்கியில் கடன் வாங்கியோ, நகைகளை அடகு வைத்தோ கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அரசு அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் கரோனா நோய்த் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வரும்போது கடை உரிமையாளர்களிடமும், தொழிலாளர்களிடமும் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அபராதம் விதிக்கின்றனர். நாங்கள் அனைத்து நோய்த் தடுப்பு விதிமுறைகளையும் பின்பற்றினாலும் அதிகாரிகள் அபராதம் விதிப்பதிலேயே குறியாக உள்ளனர்.
ஏற்கெனவே பொருளாதாரத்தை இழந்து நலிவடைந்த நிலையில் உள்ள கடை உரிமையாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். அரசின் நலத்திட்டங்களுக்கு காரைக்கால் வணிக நிறுவனங்கள் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளன.
மாவட்ட நிர்வாகம் கூறும் அனைத்துச் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு நடந்து வருகிறோம். அதிகாரிகளின் போக்கு இப்படியே நீடித்தால் வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிடும். அதிகாரிகள் சற்று மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே சுமுகமான நல்லுறவை மேம்படச் செய்ய வேண்டும்"
இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT