Published : 22 Jul 2020 06:42 PM
Last Updated : 22 Jul 2020 06:42 PM

வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லாமலேயே மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் சுறுசுறுப்பு: பெரியார் பேருந்து நிலையம் செப்டம்பரில் திறப்பு

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

கரோனாவால் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டாலும் மதுரையில் உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டு ஸ்மார்ட் சிட்டி பணிகள் தடைபடாமல் நடக்கிறது.

இந்தத் திட்டத்தில் ரூ.167 கோடியில் அமையும் புதிய பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட 3 திட்டங்கள் செப்டம்பரில் திறக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களைத் தேர்வு செய்து, அந்த நகரங்களை அனைத்து வசதிகளுடன் இருக்கும் நகரமாக மாற்றுவதே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டமாகும்.

தமிழகத்தில் 14 நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சுகாதாரமான குடிநீர், தடையில்லா 24 மணி நேரம் மின்சார விநியோகம், தரமான விசாலமான சாலைகள், அதிவேக, 'இன்டர்நெட்' இணைப்பு, தானியங்கி திடக்கழிவு மேலாண்மை, சிறப்பான நகரப் போக்குவரத்து, கனிணி மயமாக்கப்பட்ட பொதுமக்கள் சேவைகள் உள்ளிட்டவை கிடைக்கும் வகையில் இந்த நகரங்களில், உலகத் தரம் வாய்ந்த, உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிய வீதிகள், மாரியம்மன் தெப்பக்குளம், பெரியார் பேருந்து நிலையம், வைகை ஆறு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் 14 திட்டங்கள் ரூ.1012 கோடியில் நடக்கின்றன.

இப்பணிகள் வடமாநில தொழிலாளர்களை கொண்டு வேகமாக நடந்து வந்தன. குறிப்பாக பெரியார் பஸ்நிலையத்தில் நடந்து வந்த புதிய பஸ்நிலையம் பணிகள் கடந்த ஏப்ரல் மாதத்திலே செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், ‘கரோனா’வால் ஸ்மார்ட் சிட்டி கட்டுமானப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தமிழகம் முழுவதும் நடக்கும் இந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களை கொண்டு செயல்படுத்தப்பட்டது.

அந்தத் தொழிலாளர்கள், ‘கரோனா’ தொடங்கியதும் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். அவர்கள் தற்போது வரை திரும்பி வராததால் தமிழகம் முழுவதுமே ஸ்மார்ட் சிட்டி பணிகள் தோய்வடைந்துள்ளன.

பல மாவட்டங்களில் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதோடு சரி. இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், மதுரை மாநகராட்சியில் கடந்த ஜூன் மாதம், ‘கரோனா’ ஊரடங்கிற்கு மத்தியிலும் உள்ளூர் தொழிலாளர்களை கொண்டு இந்தத்ஹ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகம், ‘கரோனா’ பணிகளுடன் இந்தப் பணிக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்துவதால் தற்போது இந்த திட்டத்தில் சில பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறுகையில், ‘‘ரூ.167 கோடியில் நடக்கும்

பெரியார் பேருந்து நிலையத்தில் பஸ் வந்து நின்று செல்லும் பழைய பெரியார் பஸ்நிலையம் பணிகள் வேகமாக நடக்கிறது. இப்பணிகள் செப்டம்பரில் முடியும்.

அதுபோல், ரூ.7 கோடியில் குன்னத்தூர் சத்திரம், ரூ.42 கோடியில் அமையும் மல்டி லெவல் பார்க்கிங், மகால் பூங்கா, விளக்கு தூன் ரவுண்டானா, மேம்படுத்தப்பட்ட நான்கு சித்திரை வீதிகள் உள்ளிட்டவையும் செப்டம்பரில் முடியும்.

பெரியார் பேருந்து நிலையத்தில் பழைய காம்பளக்ஸ் பஸ்நிலையம் பகுதியில் அமையும் வணிக வளாகம் மட்டும் அடுத்த ஆண்டு மார்ச்யில் நிறைவடையும்.

இதுபோல் மற்ற பணிகளும் வேகமாக நடக்கிறது. ‘கரோனா’வால் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட 3 மாதங்கள் மட்டுமே இந்தப் பணிகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது, ’’ என்றார்.

மாநகர பொறியாளர் அரசு கூறுகையில், ‘‘பெரியார் பஸ்நிலையம் உள்ளிட்ட 3 திட்டங்கள் செப்டம்பரில் திறக்க இலக்கு நிர்ணயித்து பணி செய்கிறோம். உள்ளூர் தொழிலாளர்களை வைத்து பணிகள் நடப்பதால் முன் போல் விரைவாக பணிகள் நடக்காவிட்டாலும் தடைபடாமல் நடக்கிறது.

கரோனா ஒரிரு மாதத்தில் முடிவுக்கு வந்துவிட்டால் வடமாநிலங்களை வரவழைத்து அனைத்துப்பணிகளையும் இன்னும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x