Published : 22 Jul 2020 05:38 PM
Last Updated : 22 Jul 2020 05:38 PM
புதுச்சேரி அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு கிரண்பேடி ஒப்புதல் தந்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 20-ம் தேதி துணைநிலை ஆளுநர் உரையும் அதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் நிகழ்வும் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், 19-ம் தேதி இரவு சட்டப்பேரவைக் கூட்டத்தை மற்றொரு நாள் தள்ளிவைக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்குக் கடிதம் அனுப்பினார். ஏனெனில், பட்ஜெட் தொடர்பான கோப்பு தனக்கு வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஆளுநரும், முதல்வரும் மாறி மாறிக் கடிதம் அனுப்பினர். ஆளுநர் கிரண்பேடி சட்டப்பேரவைக்கு உரையாற்ற வரவில்லை. ஆனால் 20-ம் தேதியன்று பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து, சட்ட விதிகளின்படி, பட்ஜெட் கோப்புகள் எனக்கு அனுப்பப்படவில்லை, புதுவை மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் சம்பளம், செலவு, ஓய்வூதியம் போன்றவை அடுத்த மாதம் பாதிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருந்தார்.
இச்சூழலில், பட்ஜெட் தாக்கல் செய்ய ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தந்த கடித நகலை முதல்வர் நாராயணசாமி இன்று சட்டப்பேரவையில் காண்பித்தார்.
அதையும் தாண்டி பட்ஜெட்டுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தராவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்களை நடத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முடிவு எடுத்திருந்தனர்.
இதுதொடர்பாக, அமைச்சர் கந்தசாமி கூறுகையில், "பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தராவிட்டால், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ராஜ்நிவாஸ் சென்று கேட்போம். ஒப்புதல் கிடைக்கும் வரை அங்கேயே இருந்து போராடுவோம்" என்று தெரிவித்தார்.
பட்ஜெட் ஒப்புதல் ஆகாததால் ஜூலை 1-ம் தேதியிலிருந்து இதுவரை பல பணிகள் புதுச்சேரியில் செயல்பாட்டில் இல்லை. குறிப்பாக, முதியோர் ஓய்வூதியம், கணவரை இழந்தவர்களுக்கான உதவித்தொகை கிடைக்காமல் 1.54 லட்சம் பேர் கடும் பாதிப்பில் உள்ளனர். கரோனா காலமாக இருப்பதால் பல பணிகளுக்கு நிதி தேவையாக இருந்தது.
இந்நிலையில், பட்ஜெட் கோப்புக்கு ஒப்புதல் தரப்படுமா என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் கேட்டதற்கு, "பட்ஜெட்டுக்கு இன்று ஒப்புதல் தந்துள்ளேன். சட்டப்பேரவையில் ஆளுநரான என்னை உரையாற்ற அழைத்தனர். அதன்படி, வரும் 24-ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் உரையாற்றுகிறேன்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT