Published : 22 Jul 2020 04:46 PM
Last Updated : 22 Jul 2020 04:46 PM
மூச்சுத்திணறல் பிரச்சினையால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அதிக அளவு ஆக்சிஜன் அளிக்கும் நவீன கருவிகள் கூடுதலாகப் பயன்பாட்டுக்கு வந்தன.
மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவோருக்கு செயற்கை சுவாசம் அளிப்பதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 80 வென்டிலேட்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், அதிக ஆக்சிஜன் அளிக்கும் கருவிகள் (hfno- high flow nasal oxygen delivering machine) 7 ஏற்கெனவே உள்ளன. இந்தநிலையில், இன்று (ஜூலை 22) கூடுதலாக 10 கருவிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.
மருத்துவமனை வளாகத்தில் இந்தக் கருவிகளின் செயல்பாட்டை மருத்துவமனை டீன் கே.வனிதா விளக்கினார்.
பின்னர், 'இந்து தமிழ்' இணையதளத்திடம் அவர் கூறியதாவது:
"மூச்சுத்திணறலால் சிரமப்படும் நோயாளிகளுக்கு மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை மூடியவாறு நிமிடத்துக்கு 5 லிட்டர் முதல் அதிகபட்சம் 10 லிட்டர் வரை ஆக்சிஜனை அளிக்கலாம். அதேபோல், வென்டிலேட்டரில் நோயாளியால் இயல்பாக இருக்க முடியாது. குறிப்பிட்ட நேர இடைவெளியில் அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் மருத்துவர்கள், செவிலியர்களுக்குக் கரோனா தொற்று நேரிட வாய்ப்புள்ளது.
எனவே, கரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தும் வகையில், தலா ரூ.3.50 லட்சம் மதிப்பிலான அதிக அளவு ஆக்சிஜன் அளிக்கும் 10 கருவிகளை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. இந்தக் கருவி மூலம் மூக்கு துவாரம் வழியாகவே ஆக்சிஜன் செலுத்தப்படும்.
இதனால், நோயாளியால் இயல்பாக இருப்பதுடன், உணவருந்தவும், பேசவும் முடியும். குறிப்பாக, நிமிடத்துக்கு அதிகபட்சம் 50 லிட்டர் வரை ஆக்சிஜனை அளிக்க முடியும். இதனால், நோயாளிகள் விரைவில் குணமடைவதுடன், இறப்பு விகிதமும் குறையும்".
இவ்வாறு டீன் வனிதா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT