Published : 22 Jul 2020 07:56 PM
Last Updated : 22 Jul 2020 07:56 PM
வெகுஜனக் கிளர்ச்சியை அதிமுக - பாஜக உருவாக்குவதாக, திருப்பூர் எம்.பி.சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று (ஜூலை 22) திருப்பூர் ரயில் நிலையம் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் மதிமுக ஆகிய கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"அதிமுக, பாஜக ஆட்சியில் நாட்டில் நடக்கக்கூடாத சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன.
சமூக வலைதளம் என்பது ஜனநாயக அமைப்பில் ஆளுகிற கட்சியை பொதுமக்களின் பார்வையில் எடையிட்டு, அரசியல்ரீதியான விமர்சனத்தை முன் வைப்பதாகும். சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி கீழ்த்தரமான தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். இதற்காகவே, நாடு முழுவதும் லட்சக்கணக்கில் போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பெரியார் குறி வைக்கப்படுகிறார். ஒடுக்கப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் சமநிலையில் வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பிராமணிய மேலாதிக்கத்தின் கருவிகள்தான் அதிமுக- பாஜக. இவர்களின் தாக்குதலை, திராவிட இயக்கங்கள், பெரியார் இயக்கங்கள் மற்றும் பொதுவுடைமை இயக்கங்களும் எதிர்கொள்வோம்.
பிரம்மாண்டமான வெகுஜனக் கிளர்ச்சியை ஆட்சியாளர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்".
இவ்வாறு கே.சுப்பராயன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT