Published : 22 Jul 2020 04:25 PM
Last Updated : 22 Jul 2020 04:25 PM

ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி ஆகஸ்ட் 5-ல் மாநிலம் தழுவிய போராட்டம்: இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கோவில்பட்டி 

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்ப பெற வலியுறுத்தி ஆக.5-ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ் மாநிலக்குழு கூட்டம் காணொலி வழியாக நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ச.மயில் தலைமை வகித்தார். அகில இந்திய துணை தலைவர் கே.ராஜேந்திரன், அகில இந்திய செயலாளர் கே.பி.ஒ.சுரேஷ், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் எஸ்.சேது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கடந்த 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற 6500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ) நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யதல் மற்றும் மதிப்பெண்கள் வழங்குவதல் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்கிய தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ) நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 4 மாதகாலமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் ஒன்றரை கோடி மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் கல்வி நலன் கருதி நோய்த்தொற்றின் தாக்கம் சற்றுத் தணிந்தவுடன் மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுழற்சி முறையில் பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த 3 கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பாக ஆகஸ்ட் 5-ம் தேதி “கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்” நடத்துவது.

கூட்டத்தில் தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கணிசமான அளவில் அதிகரிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 2020-21-ம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் உடனடியாக வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் தொலைக்காட்சி வழியே ஒளி பரப்பப்படும் 2 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடங்களை அனைத்துப் பகுதி மாணவர்களும் பார்த்துப் பயன்பெறும் வகையில் எளிதில் தெரியும் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்ப வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x