Published : 22 Jul 2020 04:03 PM
Last Updated : 22 Jul 2020 04:03 PM
கரோனா காலத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு அரசு அறிவித்துள்ள விலையில்லாப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கின்றனவா, அவை அளவு குறைவில்லாமல் வழங்கப்படுகிறதா என்பதைப் பொதுமக்களிடமே நேரடியாக விசாரிக்கும் இயக்கத்தை இந்தியா முழுவதும் தொடங்கி இருக்கிறது காங்கிரஸ் கட்சியின் அங்கமான ’ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன்’ அமைப்பு.
ராகுல் காந்தியின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் ‘ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன்’ அமைப்பு, கிராம சபைக் கூட்டங்களை நடத்துவது தொடர்பாக மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. பல இடங்களில் இந்த அமைப்பே மக்களைத் திரட்டி கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதுடன் பொதுப் பிரச்சினைகளுக்காகப் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், கரோனா காலத்தில் அரசு அறிவித்தபடி மக்களுக்கான விலையில்லாப் பொருட்கள் உள்ளிட்டவை முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாகவே இருக்கின்றன. இந்தியா முழுமைக்குமே இந்தப் பிரச்சினை இருப்பதால் உண்மை நிலையை விசாரித்துத் தலைமைக்கு அறிக்கை அனுப்பும் பொறுப்பை ‘ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன்’ அமைப்பிடம் ஒப்படைத்திருக்கிறார் ராகுல் காந்தி. பிற மாநிலங்களில் இப்படி கருத்துக் கேட்கும் இயக்கம் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) இந்த இயக்கம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன்’ அமைப்பின் சிவகங்கை - புதுக்கோட்டை மண்டல ஒருங்கிணைப்பாளர் ஒய்.பழனியப்பன், “ரேஷன் கடைச் சிப்பந்திகளுக்கு அரசு சொற்பமான ஊதியம் மட்டுமே வழங்குகிறது. அதனால் பல இடங்களில் அவர்கள் மக்களுக்குப் பொருட்களை விநியோகம் செய்வதில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருக்கிறார்கள். இதனால், பெரும்பாலான இடங்களில் மக்களுக்கான ரேஷன் பொருட்கள் கள்ள மார்க்கெட்டில் விற்கப்பட்டு, உரியவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. வழங்கப்படும் பொருட்களின் எடையும் சரியாக இருப்பதில்லை.
கரோனா காலத்தில் மக்கள் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு அல்லாடிக் கொண்டிருக்கையிலும் இந்த முறைகேடுகள் தொடர்வது வேதனையளிக்கிறது. அரசு வழங்குவதாக அறிவித்திருக்கும் விலையில்லா அரிசியைக்கூட ரேஷன் கடைக்காரர்கள் கிலோ கணக்கில் குறைத்து விடுகிறார்கள். இலவசமாக வருவதுதானே என நினைத்து மக்களும் இதை எதிர்த்துக் கேட்காமல் விட்டுவிடுகிறார்கள்.
இதையெல்லாம் ஓரளவுக்காவது சரிசெய்ய, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் ராகுல் காந்தி இந்த இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார். இதன்படி நாளை (23-ம் தேதி) காலை 10 மணியிலிருந்து ரேஷன் கடைகளுக்கு வரும் மக்களிடம் எங்கள் அமைப்பினர் விசாரணை நடத்துவார்கள். இதற்காக எங்கள் மண்டலத்தில் மட்டும் 30 பேரைக் களத்தில் இறக்குகிறோம். ஒரு நாள் மட்டுமே இந்த விசாரணை இயக்கம் நடக்கும். ஒரே நாளில் எல்லாக் கடைகளிலும் இவர்களால் விசாரணை நடத்திவிட முடியாது என்றாலும் ஒவ்வொருவரும் தலா 5 கடைகளுக்குக் குறையாமல் விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி கேட்டிருக்கிறோம்.
ரேஷன் கடைகளில் எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றனவா என்பது குறித்து மக்களிடம் விசாரிப்பதுடன் சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படுகின்றனவா என்பதை நாங்களும் கண்காணிப்போம். விசாரணையில் மக்கள் சொல்லும் தகவல்களை அந்தந்த யூனியன் வாரியாகத் தொகுத்து, தலைமைக்கு அனுப்பி வைப்போம்.
நமது மண்டலத்தில் கூடுதல் ஏற்பாடாக, களத்துக்குச் செல்லும் அமைப்பினரிடம் தங்களது கள விசாரணையை அப்படியே வீடியோ எடுத்து முகநூலில் அப்லோடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் சொல்லும் குறைகள் முகநூலில் வைரலாகும்போது அதைப் பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பொறுப்பாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. அத்துடன், எங்களது கள விசாரணையால் மக்கள் மத்தியில் ரேஷன் பொருட்கள் அனைத்தையும் கேட்டுப் பெறவும், அவை சரியான எடையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் உரிய விழிப்புணர்வு ஏற்படும்” என்றார்.
மேலும் தொடர்ந்தவர், “காங்கிரஸ் ஆட்சியில் ஆண்டுக்கு 150 நாட்களாக இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை (100 நாள் வேலைத் திட்டம்) பாஜக ஆட்சியில் 100 நாட்களாகக் குறைத்துவிட்டார்கள். அதை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றும் கிராமங்கள்தோறும் திட்டப் பயனாளிகளிடம் கையெழுத்து இயக்கம் ஒன்றையும் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் மூலம் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்றும் சொன்னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT