Published : 22 Jul 2020 02:29 PM
Last Updated : 22 Jul 2020 02:29 PM
காரைக்காலில் இரு இடங்களில் கரோனா பரிசோதனை மையங்கள் அடுத்த வாரத்தில் அமைக்கப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 22) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் தற்போது கரோனா வார்டில் 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெளியூர்களிலிருந்து வந்தோருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது தெரியவருகிறது. அத்தியாவசியத் தேவைகளின்றி பொதுமக்கள் காரைக்கால் மாவட்டத்துக்குள் வருவதைத் தவிர்க்க வேண்டும். மாவட்ட எல்லைப் பகுதிகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும் தனிமனித இடவெளியை முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை. பொது இடங்களிலும், தனியிடங்களிலும் கட்டாயம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனால் கரோனா பரவலைத் தடுக்க முடியும்.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, காரைக்காலில் உள்ள ஜிப்மர் கிளை ஆகிய இரு இடங்களிலும் கரோனா பரிசோதனை மையம் அடுத்த வாரத்தில் அமைக்கப்படவுள்ளது. 'TrueNAT' முறையில் இங்கு பரிசோதனை செய்யப்படும். இரு மையங்களிலும் சேர்த்து ஒரு நாளைக்கு சுமார் 80 மாதிரிகள் பரிசோதனை செய்ய முடியும். இதனால் பரிசோதனை முடிவுகளைக் காலதாமதமின்றி விரைவாகத் தெரிந்து கொள்ள முடியும்.
'பி.எம்.கேர்' நிதியிலிருந்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு 7 வென்டிலேட்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 20 வென்டிலேட்டர்கள் உள்ளன. போதுமான அளவில் வென்டிலேட்டர்கள் உள்ளன".
இவ்வாறு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்தார்.
தற்போது காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரிசோதனைக்காக எடுக்கப்படும் சளி மாதிரிகள் திருவாரூர் அல்லது புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டு வருகின்றன. இதனால் முடிவுகள் வருவதற்கு ஓரிரு நாட்கள் ஆகின்றன. இந்நிலையில், காரைக்காலில் பரிசோதனை மையம் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT