Published : 22 Jul 2020 01:42 PM
Last Updated : 22 Jul 2020 01:42 PM
காங்கிரஸ் மீதான கோபத்தால் கூட்டணிக் கட்சியான திமுக புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை இன்று முதல் முறையாக முற்றிலும் புறக்கணித்தது.
புதுச்சேரியில் கடந்த 2002-ல் காங்கிரஸ் ஆட்சியில் ராஜீவ் காந்தி பெயரில் சோனியா காந்தி காலை சிற்றுண்டித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ராஜீவ் பெயரில் காலை பிரெட் தரப்பட்டு வந்தது. பின்னர் 2013-ல் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் பாலும், பிஸ்கட்டும் 2017-ம் ஆண்டு முதல் தரப்பட்டது. தற்போது காலையில் பால் வழங்கும் திட்டத்தை மேம்படுத்தப்பட்ட 'டாக்டர் கருணாநிதி காலை சிற்றுண்டித் திட்ட'மாக விரிவுபடுத்தப்படுவதாக பட்ஜெட்டில் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.
காலை சிற்றுண்டித் திட்டம் ராஜீவ் பெயரில் உள்ளதா, கருணாநிதி பெயரில் உள்ளதா? என்ற சர்ச்சை சட்டப்பேரவையில் நேற்று (ஜூலை 21) எழுந்தது. இதை சட்டப்பேரவையில் அதிமுக எழுப்பியது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் இது தொடர்பாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏ சிவா, "அமைச்சர்கள் தூண்டிவிட்டுத்தான் அதிமுகவினர் பேசுகின்றனர். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்று குறிப்பிட்டு வெளிநடப்புச் செய்தனர்.
அதைத்தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்ததால் முதல்வர் நாராயணசாமி, "இரு தலைவர்களின் பெயரிலும் திட்டம் தொடரும். பால், பிஸ்கட் திட்டம் ராஜீவ் பெயரிலும், காலை சிற்றுண்டித் திட்டம் கருணாநிதி பெயரிலும் இருக்கும்" என்று செய்தியாளர்களிடம் நேற்று மாலை விளக்கம் தந்தார்.
ஆனால், நேற்று இரவு காங்கிரஸார் புதுச்சேரி ராஜீவ் சிலையருகே தீப்பந்தம் ஏந்திப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட வட்டார காங்கிரஸ் தலைவர் முரளிதரன், "ஆளும் காங்கிரஸ் அரசு ராஜீவ் சிலையில் கூட மின்விளக்கு போடவில்லை. ராஜீவ் பெயரிலுள்ள காலை சிற்றுண்டித் திட்டத்தை இரு தலைவர்கள் பெயரில் மாற்றுவது தவறு" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 22) காலை சட்டப்பேரவை கூடியது. கூட்டணிக் கட்சியான திமுக எம்எல்ஏக்கள் சிவா, கீதா, வெங்கடேசன் ஆகியோர் சட்டப்பேரவை நிகழ்வுகளை முதல் முறையாக முற்றிலும் புறக்கணித்தனர்.
அதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏவும், தெற்கு மாநில அமைப்பாளருமான சிவாவிடம் கேட்டதற்கு, "சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க திமுக எம்எல்ஏக்களுக்கு விருப்பமில்லை" என்று தெரிவித்தார்.
காரணம் என்ன?
இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் கேட்டதற்கு, "கருணாநிதி பெயரில் சிற்றுண்டித் திட்டம் கொண்டுவந்தது தொடர்பாக நேற்று அதிமுக உறுப்பினர்கள் திமுகவுக்கு எதிராகப் பேசியபோது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்தனர். அதனால் இத்தகவலை மேலிடத்தில் தெரிவித்தனர். அவர்களின் ஆலோசனை அடிப்படையில்தான் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT