Published : 22 Jul 2020 12:53 PM
Last Updated : 22 Jul 2020 12:53 PM
கரோனா காலத்தில் உருவாகியிருக்கும் நெருக்கடிகளுக்கு நடுவே, தரிசாகப் போடப்பட்டிருந்த தங்கள் நிலங்களைப் பசுமையாக்கி பாரம்பரிய விவசாயத்திற்கு மாறி வருகின்றனர் நீலகிரியைச் சேர்ந்த பழங்குடி மக்கள். ‘‘இது எங்களுக்கு வரமா, சோதனையா என்றெல்லாம் சொல்லத் தெரியலை. ஆனா, இப்போதைய சூழ்நிலைக்கு இதைத் தவிர எங்களுக்கு வேற வழியில்லை” என்கிறார்கள் இவர்கள்.
தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் பழங்குடியினர் அதிகம். அதிலும் பண்டைய பழங்குடிகள் என்று அழைக்கப்படும் தோடர், கோத்தர், குரும்பர், இருளர், பணியர் மற்றும் காட்டு நாயக்கர் ஆகிய 6 இனங்கள் பெருமளவில் வசித்து வரும் பழங்குடி கிராமங்கள் இங்கு உள்ளன. கூடலூரைச் சுற்றியுள்ள ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை, முதுமலை, மசினக்குடி, சேரங்கோடு பகுதிகளில் காட்டில் வாழ்ந்தாலும் பழங்குடிகளுக்கென்று ‘செட்டில்மென்ட் நிலங்கள்’ உண்டு. அதில் இவர்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்தனர்.
முதுமலை புலிகள் காப்பகத் திட்டம், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ஆடு, மாடுகள் மேய்க்கக் கூடாது, காடுகளுக்குள் சென்று வனப்பொருட்களை எடுக்கக் கூடாது எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை இவர்கள் எதிர்கொண்டனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு, அதன் தொடர்ச்சியாக அதிகரித்த தங்கும் விடுதிகள் ஆகிய காரணங்களால் பெரும்பாலான பழங்குடி மக்கள், பாரம்பரிய விவசாயத்தை விட்டுவிட்டு வெவ்வேறு தொழில்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர்.
குறிப்பாக, முதுமலை சுற்றுவட்டார ரிசார்ட்டுகளில் (தங்கும் விடுதிகள்) மாதம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்குப் போனவர்கள் ஏராளம். பல ரிசார்ட்டுகள் யானைகள் வழித்தடத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் 39 ரிசார்ட்டுகளை மூட உத்தரவிட்டது. இதில் பல பழங்குடி மக்கள் வேலையிழந்தனர்.
இதனால் கூடலூர், பந்தலூர் எனப் பல்வேறு பகுதிகளுக்குக் கூலி வேலைக்குச் சென்று வந்தனர். அந்த வேலையும் கரோனா பொது முடக்கத்தால் இல்லாமல் போய்விட்டது. இதையடுத்து பலர் காடுகளுக்குள் சென்று தேன் எடுத்தல், கடுக்காய், பூச்சக்காய் சேகரித்தல், காட்டுக்கீரை, நூரே கிழங்கு எடுத்து வந்து சமைத்தல் என ஈடுபட்டனர்.
இப்போது, தரிசாகக் கிடந்த தங்கள் பூர்விக நிலங்களின் பக்கம் இவர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. நிலங்களைச் சீர்படுத்தி ராகி, தினை, சோளம், கிழங்கு, மொச்சை, அவரை, துவரை, பீன்ஸ், மிளகாய் என பயிரிடத் தொடங்கியுள்ளனர்.
உதாரணமாக, மசினக்குடி அருகே உள்ள தோட்டலக்கி, தங்கல், குரும்பர் பள்ளம், குரும்பர்பாடி, கோயில்பட்டி, பொக்காபுரம் பழங்குடி கிராமங்களில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பான்மையோர் இருளர்கள். இவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் பாரம்பரிய விவசாயத்திற்குத் திரும்பிவிட்டதாகச் சொல்கிறார் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த போஜன்.
“20-30 ஆண்டுகளாகத் தரிசாக் கிடந்த என்னோட 3 ஏக்கர் நிலத்தைச் சீர்படுத்தி விவசாயத்தில் இறங்கிட்டேன். முன்னெல்லாம் மழை வந்தா மட்டும் காட்டுல ராகி, தினை ஏதாச்சும் தூவுவோம். அதுல பெரிசா வருமானம் கிடையாது. இப்போ விவசாயம்தான் எங்களுக்குப் பெரிய ஆறுதலா இருக்கு. தோட்டக்கலை ஆபீஸர் ஆலோசனைப்படி பச்சைக் காய்கனிகள்கூடப் போட்டிருக்கேன். வீட்டு செலவுக்குக் கொஞ்சம் காய்கனிகளை எடுத்துட்டு ஊட்டி வியாபாரிக்கு விலைக்குக் கொடுத்தேன். பெரிசா லாபமெல்லாம் கிடைக்கலை.
மேட்டுப்பாளையம், ஈரோடு, கோயமுத்தூர்னு முந்தியெல்லாம் காய்கள் போகும். இப்ப ஊட்டியில மட்டும்தான் விற்க முடியுது. கரோனா பிரச்சினை எப்போ முடிவுக்கு வரும்னு தெரியலை. இப்படியான சூழல்ல மீதி இருக்கிற அத்தனை பேரும் விவசாயத்துக்கு வந்துதான் ஆகணும். ஆயிரம்தான் இருந்தாலும் பாட்டன், பூட்டன் செஞ்ச தொழில் நம்மை எப்போதுமே கைவிடாது” என்கிறார் போஜன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment