Published : 22 Jul 2020 11:48 AM
Last Updated : 22 Jul 2020 11:48 AM
புதிதாக உதயமாகியிருக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தைக் கட்டமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டங்களை சம்பிரதாயமாக நடத்தாமல் முறையாக நடத்த வேண்டும் என்று மயிலாடுதுறை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையைத் தலைமையாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் எனக் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ஜூலை 15-ல், மயிலாடுதுறை மாவட்டத்திற்கென தனி அதிகாரியும், காவல் கண்காணிப்பாளரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் ஜூலை 30-ம் தேதி நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையிலும் நடத்தப்படும் என நாகை மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டங்களை வெறுமனே சம்பிரதாயக் கூட்டங்களாக நடத்தாமல் ஒரு சரித்திர நிகழ்வாக நடத்திட வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''பொதுமுடக்கத்தால் பொது வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. போக்குவரத்து முடங்கி இருப்பதால் இதில் சாமானிய மக்கள் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. சொந்தமான வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாது, இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளைக் கடிதங்களாக எழுதி, கூட்ட அரங்கில் அதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை வைத்துப் பார்க்கும்போது இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் ஒரு சம்பிரதாயத்துக்காக நடத்தப்படுகிறதோ என நாங்கள் சந்தேகப்படுகிறோம்.
கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அப்படிச் சம்பிரதாய சடங்காக இல்லாமல் ஆக்கபூர்வமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். எனவே, இந்தக் கூட்டத்தில் விருப்பமுள்ள மக்கள் அனைவரும் தடையில்லாமல் கலந்து கொள்ளவும், தங்களுடைய கருத்துகளைச் சுதந்திரமாகத் தெரிவிப்பதற்கும் வாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்ட அமைப்புக் கூட்டங்கள் என்பது மாவட்ட வரலாற்றில் ஒரு சரித்திர நிகழ்வாக இருக்கவேண்டுமே தவிர சம்பிரதாய நிகழ்வாக இருக்கக்கூடாது. கூட்டங்கள் நடைபெற உள்ள ஜூலை 30-ம் தேதி அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் அல்லது பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளைக் கடிதங்கள் மூலமும் இ-மெயில் , வாட்ஸ் அப் மூலமும் தெரிவிக்க உரிய வசதிகளும் அவகாசமும் வழங்கப்பட வேண்டும்.
நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் மயிலாடுதுறை மாவட்ட அமைப்பு தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டங்களை ஜனநாயக ரீதியாகவும், அனைத்துத் தரப்பு மக்களும் பங்குபெறும் கூட்டமாகவும் கூட்டவேண்டும்''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment