Published : 21 Jul 2020 09:39 PM
Last Updated : 21 Jul 2020 09:39 PM

காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை அழியாமல் சேகரிக்கக் கோரி புகார்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை

காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை அழியாமல் பாதுகாக்கக் கோரிய புகார் தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கடுமையாக தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சினை பெரிதாக எதிரொலித்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டது.

ஜெயராஜ்- பென்னிக்ஸ் மரண வழக்கை நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். அதில் சாத்தான்குளம் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் இருவர் உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணையின்போது, சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அது அழிந்துபோயிருந்தது.

ஒவ்வொரு நாள் முடியும்போது தானாக அழிந்து விடும்படியும், அந்தப் பதிவுகளை மீண்டும் எடுக்க முடியாத வகையிலும் செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் அதிசயகுமார் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

அவரது புகாரில், “காவல் நிலையங்களில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மறைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஒரு வருடம் வரை அழியாமல் பாதுகாக்கும் வகையில் மாவட்ட வாரியாக கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

அவரது புகாரின் அடிப்படையில் வழக்காக விசாரணைக்கு எடுத்த மனித உரிமை ஆணையப் பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன், காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை அழியாமல் பாதுகாக்கக் கோரியது தொடர்பாக தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x