Published : 21 Jul 2020 08:28 PM
Last Updated : 21 Jul 2020 08:28 PM
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதல் பெற்ற பின்னர்தான் ஆளுநர் உரை, பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதிகள் இறுதி செய்யப்பட்டன என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (ஜூலை 21) மாலை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் நாராயண்சாமி கூறியதாவது:
‘‘நிகழ் நிதியாண்டு 2020-21 பட்ஜெட் தயாரிக்கும் பணி கடந்த டிசம்பரிலேயே முன்னெடுக்கப்பட்டது. புதுச்சேரிக்கான மானியத்தொகை எவ்வளவு என்பதை மத்திய அரசு அறிவித்த நிலையில், பட்ஜெட்டுக்குத் தேவையான மீதமுள்ள தொகைக்காக நபார்டு, ஹட்கோ மற்றும் வெளிச்சந்தையில் இருந்து எவ்வளவு கடன் பெறுவது என்பதையும் ஆலோசித்து கடந்த ஏப்ரலில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
ரூ.9,500 கோடிக்கு பட்ஜெட் தயாரித்து துணைநிலை ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பியபோது, மாநில திட்டக்குழு பரிந்துரையின்றி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் திருப்பி அனுப்பினார். தேசிய அளவில் திட்டக்குழு கலைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் கேட்டதற்காக ஏற்கெனவே மாநிலத் திட்டக்குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்களிடம் எழுத்துபூர்வமாக ஒப்புதல் பெற்று மீண்டும் கோப்பு அனுப்பப்பட்டது.
40 நாட்கள் இழுத்தடிப்புக்குப் பின்னர் மே 13-ல் மத்திய அரசுக்கு ஆளுநர் இந்தக் கோப்பை அனுப்பினார். இப்போது மத்திய அரசின் ஒப்புதலுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அதற்கான கோப்பு, ஆளுநர் உரை ஆகியவற்றை அனுப்பி ஜூலை 17-ம் தேதி ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் பின்னர்தான் சட்டப்பேரவை கூடும் தேதி, ஆளுநர் உரை, பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதிகள் ஆளுநரின் ஒப்புதல்படி முடிவு செய்யப்பட்டன.
ஆனால், மே 19-ம் தேதி இரவு திடீரென, மானியக் கோரிக்கை தொடர்பான கோப்பு தனக்கு இதுவரை கிடைக்காத நிலையில் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என ஆளுநர் கிரண்பேடி அறிவித்துவிட்டார். உரிய விளக்கம் அளித்த பின்னரும் ஆளுநர் அதை ஏற்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக ஆளுநர் கிரண்பேடி பட்ஜெட் கூட்டத்துக்கு எவ்வாறு ஒப்புதல் அளித்தாரோ அதே நடைமுறையில்தான் இப்போதும் ஒப்புதல் பெற்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளோம்.
பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விவாதம் செய்து மானியக் கோரிக்கை கோப்பை அனுப்புவதுதான் ஜனநாயகம். ஒரு தனிப்பட்ட நபரின் (ஆளுநர்) விருப்பத்துக்காக முன்கூட்டியே அனுப்ப இயலாது. பட்ஜெட் மானியக்கோரிக்கை தொடர்பான கோப்பு ஆளுநருக்கு இப்போது அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். அவர் ஒப்புதல் அளிக்காவிட்டால் அரசு என்ன முடிவு செய்யும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்''.
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஏற்கெனவே ராஜீவ் காந்தி பெயரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்குக் காலை வேளையில் ரொட்டி, பால் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், பட்ஜெட்டில் மேம்படுத்தப்பட்ட ராஜிவ் காந்தி காலை சிற்றுண்டித் திட்டம், கருணாநிதி காலை சிற்றுண்டித் திட்டம் என இரு உணவுத் திட்டங்களை முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். ராஜீவ் காந்தி பெயரிலான திட்டத்துக்குக் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் சர்ச்சையைக் கிளப்பினர்.
இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி கூறும்போது, ''ராஜீவ் காந்தி பால் வளத்திட்டம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. பட்ஜெட்டில் தவறுதலாக அச்சடித்துவிட்டனர். இரண்டு திட்டங்களுமே பள்ளி மாணவர்களுக்குக் காலையில் அமல்படுத்தப்படும். இந்த இரண்டு திட்டங்களில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் தங்களது தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளலாம். ரொட்டி, பால் வேண்டும் என்றால் ராஜீவ் காந்தி பால்வளத் திட்டத்தையும், இட்லி, கிச்சடி வேண்டும் என்றால் கருணாநிதி காலை சிற்றுண்டித் திட்டத்தையும் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT