Published : 21 Jul 2020 04:42 PM
Last Updated : 21 Jul 2020 04:42 PM
கரோனா பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினரைத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவமதித்ததாக அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் வலியுறுத்தினர். சுகாதாரத் துறையினரை விமர்சித்த விவகாரத்தில் ஆளுநர் கிரண்பேடி வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனப் பேரவையில் சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.
சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு சமீபத்தில் சென்ற துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அங்கிருந்த மருத்துவர்கள், அதிகாரிகளைக் கடுமையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள், ஊழியர்கள் ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் இன்று (ஜூலை 21) சட்டப்பேரவை நிகழ்விலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த சூழலில் ஆளுநருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
தொடக்கத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன், "முழு உயிரைப் பணயம் வைத்து பணி செய்வோரை கீழ்த்தரமாக விமர்சனம் செய்வது அவமானகரமாக உள்ளது. இதில் ஐஏஎஸ்அதிகாரிகள், ஆளுநருடன் இணைந்து செயல்படுகின்றனர். இதனை சட்டப்பேரவை கண்டிக்க வேண்டும். உள்ளூர் அதிகாரியை அவமானப்படுத்தினால் சும்மா இருக்கக்கூடாது. பாடத்தைப் புகட்டுங்கள்" என்று தெரிவித்தார்.
அரசு கொறடா அனந்தராமன், "அதிகாரிகள் மத்தியில் வடக்கு - தெற்கு பாகுபாடு இருக்கிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாது. மணி அடிக்கவும், கையைத் தட்டவும் ராஜ்நிவாஸை விட்டு வெளியே வந்த கிரண்பேடி, அதன்பிறகு வெளியே வரவில்லை. ஆளுநருக்கு உயிர் பயம். அதனால்தான் வார இறுதி நாட்கள் ஆய்வை நடத்தவில்லை. கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப[ப் பெற வேண்டும்" என்றார்.
காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூர்த்தி, "அகிம்சையாக செயல்பட்டது போதும். நான் புதுச்சேரிக்காக ஆளுநர் மாளிகை முன்பு தீக்குளிக்கவும் தயாராக இருக்கிறேன்" என்றார்.
திமுக எம்எல்ஏ சிவா கூறுகையில், "நியமிக்கப்பட்ட ஆளுநர் பொறுப்புடன் நடக்காமல் தவறாகச் செயல்படுகிறார். இங்கிருப்போர் வடமாநிலம் சென்று இதுபோல் இருக்க முடியுமா? கடும் நடவடிக்கை எடுப்பதுதான் தற்போதைய தேவை. கடைசி நாள் வரை ஆட்சியில் இருக்க வேண்டும் என்று நினைத்து ஆட்சி புரிந்தால் இதுபோல்தான் அதிகாரிகள், ஆளுநர் இருப்பார்கள். இந்திய அளவில் திரும்பிப் பார்க்கும் முடிவை எடுங்கள்" என்று தெரிவித்தார்.
அமைச்சர் கந்தசாமி பேசுகையில், "முதல்வர் அடக்கியதால் அமைதியாக இருக்கிறோம். பட்ஜெட்டில் கையெழுத்திடாவிட்டால் ஆளுநர் அலுவலகத்தில் சென்று அமர்ந்து போராடுவோம்" என்று தெரிவித்தார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசுகையில், "தமிழ் அதிகாரிகளை சரியான முறையில் ஆளுநர் அணுகுவதில்லை. புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி துரோகம் செய்கிறார். சுகாதாரத்துறையில் கிரண்பேடி செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்டேன். மீண்டும் கிரண்பேடி தவறுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். மக்களுக்காக மருத்துவர்களிடம் கேட்கிறேன்" என்று கூறினார்.
முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "மக்களைக் காக்கும் பணியில் தொடர்ந்து சுகாதாரத் துறையினர் ஈடுபடுகிறீர்கள். நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். அனைத்தையும் மறந்து இக்காலத்தில் மக்கள் சேவையைத் தொடரக் கோருகிறோம். கிரண்பேடியிடமிருந்து பெருந்தன்மையை எதிர்பார்க்கவில்லை. தற்போதைய கரோனா காலத்தில் அரசுடன் ஒருங்கிணைந்து ஆளுநர் செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஆளுநர் மீது கண்டனத் தீர்மானம் எதையும் கொண்டுவரவில்லை.
இறுதியாக சபாநாயகர் சிவக்கொழுந்து, "துணைநிலை ஆளுநர் சுகாதாரத்துறையினரிடம் கூறிய வார்த்தையை திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதனிடையே, இரண்டாவது நாளாக இன்றும் ஆளுநரைக் கண்டித்துப் போராட்டம் நடைபெற்றது. ஆளுநர் தனது வார்த்தைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரி அரசு மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை மற்றும் அனைத்து சுகாதார மையங்களில் இன்று இரண்டு மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
சுகாதார ஊழியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவின் மருத்துவர் அன்பு செந்தில் கூறுகையில், "கரோனா நோய் காலத்தில் விடுமுறையையும் பார்க்காமல் பணியாற்றும் மருத்துவர்களையும் சுகாதார ஊழியர்களையும் மனம் புண்படும் வகையில் ஆளுநர் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் வார்த்தைகளைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார்.
ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் இன்று கறுப்புத் துண்டு அணிந்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT