Published : 21 Jul 2020 04:22 PM
Last Updated : 21 Jul 2020 04:22 PM
ராஜீவ் காந்தி பெயரில் சோனியா தொடங்கி வைத்த காலை உணவுத் திட்டத்தை கலைஞர் கருணாநிதி சிற்றுண்டித் திட்டமாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மாற்றிவிட்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. ஆளும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையில் மோதலால் பல நலத்திட்டங்கள் செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது. வரும் ஆண்டு தேர்தல் வர உள்ள சூழலில் கூட்டணிக் கட்சியான திமுகவும், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் பல கேள்விகளை எழுப்பத் தொடங்கி விமர்சித்தும் வருகிறது.
இச்சூழலில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று (ஜூலை 20) பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு தற்போது காலையில் பால் தரப்படுகிறது. இது விரிவுபடுத்தப்பட்டு கலைஞர் கருணாநிதி சிற்றுண்டித் திட்டமாக அமல்படுத்தப்படும், சிற்றுண்டியில் இட்லி, பொங்கல், கிச்சடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி திமுகவினர் பலரும் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதே நேரத்தில் காங்கிரஸாரும், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரும் இதிலுள்ள மாற்று விஷயத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பாக, காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில் கடந்த 2002-ல் காங்கிரஸ் ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் ரங்கசாமி, அப்போதைய கல்வி அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் முயற்சியால் இந்தியாவிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு காலை உணவாக இலவசமாக பால், பிரெட் தரும் திட்டம் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தைப் புதுச்சேரிக்கு வந்து சோனியா காந்தி தொடங்கி வைத்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக இத்திட்டம் கடந்த 2013-ல் நிறுத்தப்பட்டது.
சில மாதங்கள் கழித்து பால் மட்டும் தர முடிவு எடுக்கப்பட்டு மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை காலை நேரத்தில் சூடான பால் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2017-ல் பாலுடன் பிஸ்கட் தரும் திட்டத்தை புதுச்சேரி, காரைக்காலில் அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல்வர் நாராயணசாமி தொடங்கினார். பெங்களூருவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தரப்பட்டது.
தற்போது ராஜீவ் பெயரில் தொடங்கிய திட்டத்தையே ஆளும் காங்கிரஸ் அரசு மாற்றியுள்ளது. கருணாநிதி பெயரில் புதிய திட்டத்தைக்கூட அறிவிக்கலாம். அதை விட்டுவிட்டு ஏற்கெனவே இருந்த காங்கிரஸ் தலைவர் பெயரை மாற்றித் தொடங்கியுள்ளனர்" என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேநேரத்தில் 2002-ல் கல்வியமைச்சராக இருந்த லட்சுமி நாராயணன் தற்போது முதல்வரின் நாடாளுமன்றச் செயலராகவும் உள்ளார். அவர் தனது முகநூலில், "ராஜீவ் காந்தி காலை உணவு திட்டம் தொடக்க விழா கடந்த 2002 ஜூன் 22-ல் சோனியா காந்தியால் மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்டது. அப்போது நான் கல்வியமைச்சராக இருந்தேன். இப்போது இத்திட்டம் நடப்பாண்டு ஜூலையில் முடக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டு இத்திட்டத்தை சோனியா காந்தி தொடங்கி வைத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸார் பலரும் தங்கள் கேள்வியை எழுப்பத் தொடங்கியுள்ளனர். சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கும் முதல்வர் நாராயணசாமி பதில் ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT