Published : 21 Jul 2020 01:42 PM
Last Updated : 21 Jul 2020 01:42 PM
நீதிமன்றம் வரும் வழக்கறிஞர், பொதுமக்கள், ஊழியர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பின்னரே நீதிமன்றத் திறப்பு குறித்து முடுவெடுக்க முடியும் என வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளிடம் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவிய நிலையில் உயர் நீதிமன்றத்திலும் பலர் பாதிக்கப்பட்டனர். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு போலீஸார் உள்ளிட்ட பலரும் தொற்றுக்கு ஆளாகினர். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தமிழகம் முழுவதுமிருந்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகளுக்காக வருவதால் கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக உயர் நீதிமன்றம் மூடப்பட்டது.
பின்னர் வழக்குகள் தேங்காமல் இருக்க காணொலிக் காட்சி மூலம் வழக்கு நடந்து வந்தது. ஆனாலும் முழுமையாக நீதிமன்றம் செயல்படவில்லை. இதனால் வழக்குகள் தேக்கம் அடைந்தன. வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
தொழில் பாதிப்பு, வருமானம் இல்லாமல் தவிப்பு, தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளதால் பார் கவுன்சில், வழக்கறிஞர்கள், சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தைத் திறக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து தலைமை நீதிபதியிடம் முறையிட்டனர். சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் கரோனா தாக்கம் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் ஆலோசித்துதான் இந்த விஷயத்தில் முடிவு செய்ய முடியும் என தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கூறியதாகத் தெரிகிறது.
காணொலி நீதிமன்றத்தின் தொழில்நுட்பக் கோளாறுகள் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் வீட்டிலிருந்து இணையம் மூலம் வழக்கில் ஆஜராக முடியாதவர்களுக்கு நீதிமன்றத்தில் தனி இணையதள அறை அமைப்பது குறித்தும் பரிசீலித்து வருவதாகவும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றம் வரும் வழக்கறிஞர், பொதுமக்கள், ஊழியர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்த பின்னரே நீதிமன்றத் திறப்பு குறித்து முடுவெடுக்க முடியும் என தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT