Published : 21 Jul 2020 01:27 PM
Last Updated : 21 Jul 2020 01:27 PM

தமிழும் திருக்குறளும் திமுகவின் குடும்பச் சொத்தல்ல: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சனம் 

சென்னை

ராணுவ உடை அணிந்து, திருக்குறளை மேற்கோள்காட்டிப் பேசினால் தமிழர்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா? என்று மொழியை வைத்து அரசியல் நடத்தும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் கேட்டது கண்டனத்திற்குரியது. திருக்குறள் திமுகவின் குடும்பச் சொத்தல்ல. தமிழை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு, தமிழை உயர்த்தும் தலைவரின் மகத்துவம் புரியாதுதான் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“திமுக தலைவர் ஸ்டாலின், எதற்கெடுத்தாலும் பாஜகவை, மத்திய அரசைக் குறை சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 50 ஆண்டுகால நேர்மையான, மக்கள் நலன் சார்ந்த உழைப்பு, பொது வாழ்வில் தூய்மை, ஆட்சியில் திறமை, தேசத்தின் மீது கொண்ட அக்கறை ஆகியவற்றை முதலீடாகக் கொண்டு, பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, கடின உழைப்பால், மக்களின் ஆதரவால், மக்களின் ஆசியால் பிரதமராக விளங்குகிறார். உங்களைப் போல் தந்தையின் ஆதரவோடு திணிக்கப்பட்ட தலைவராக அல்ல. உலகப் பொதுமறையான திருக்குறள் உலகம் முழுமைக்கும் சொந்தமானது. இதன் பெருமைகளை பாரதப் பிரதமர், உலகமறியச் செய்து கொண்டிருக்கின்றார். தமிழ் மறையாம் திருக்குறளை, இமயத்தின் உச்சியில் நின்று பேசுவதை தங்களால் ஜீரணிக்க முடியவில்லை.

ராணுவ உடை அணிந்து, திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினால் தமிழர்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா? என்று , மொழியை வைத்து அரசியல் நடத்தும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் கேட்டது கண்டனத்திற்குரியது. திருக்குறள் திமுகவின் குடும்பச் சொத்தல்ல. தமிழை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு, தமிழை உயர்த்தும் தலைவரின் மகத்துவம் புரியாதுதான்.

முருகனைப் பற்றி அவதூறு பரப்பி, கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய கறுப்பர் கூட்டத்தை வாய் திறந்து கண்டிக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏனோ மனம் வரவில்லை. தமிழகத்தில் கோடிக்கணக்கான முருக பக்தர்களுக்கு ஸ்டாலின் தரும் மரியாதை அவ்வளவுதான். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஸ்டாலின் கறுப்பர் கூட்டத்தின் பதிவுகளைக் கண்டித்தார் என்று தவறான தகவலைத் தருகிறார்.

இந்து மத உணர்வுகளை எப்போதுமே மதிக்காதவர் ஸ்டாலின் என்பது, தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று. ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றபோது நெற்றியில், அர்ச்சகர் வைத்த குங்குமத்தை பொதுவெளி என்று தெரிந்தும் உடனடியாக அழிக்கவில்லையா? இதுவரை ஸ்டாலின் என்றாவது கோயில் கும்பாபிஷேகத்திற்குச் சென்றிருக்கிறாரா ? இந்துப் பண்டிகை தினங்களில் மக்களுக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கிறாரா?

இப்போது தேர்தல் நெருங்குகிற காலம் என்பதாலும், இந்து மதம் சார்ந்த மக்கள், ஸ்டாலினின் இந்து மத விரோதப் போக்கைப் புரிந்து வேதனைப்படத் தொடங்கியுள்ளனர் என்பதாலும்தான், ஆர்.எஸ். பாரதி போன்றோர் எங்கள் கட்சியிலும் பெரும்பான்மையாக இந்துக்கள் இருக்கிறார்கள், திமுக தலைவர் கருணாநிதி கோயில் குளத்தைச் சுத்தப்படுத்தினார் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் என்றுமே செயல்பட்டது கிடையாது. அவர் சட்டப்பேரவைக்கு உள்ளே பேசியதை விட, வெளிநடப்பு செய்த பிறகு சட்டப்பேரவைக்கு வெளியே பேசியதுதான் அதிகம். எதற்கெடுத்தாலும் மத்திய, மாநில அரசுகளைக் குறை சொல்லத் தெரியும்.

மத்திய அரசு தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கிட அனுமதியும், நிதியும் வழங்கியுள்ள சூழலில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவிகித உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு 250 மாணவர்களும், அடுத்து புதிய கல்லூரிகள் தொடங்கிய பிறகு 500 மாணவர்கள் வரையிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவர்களாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இதுவரை வரவேற்றிருக்கிறாரா? இனி எவரும், சமூக நீதி இல்லை, ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறி ‘நீட்’ தேர்வை எதிர்க்க மாட்டார்கள்.

அனைவருக்கும் வீடு, அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரம், ஏழைகளுக்கு மாதம் ஒரு ரூபாயில் 2 லட்ச ரூபாய் குடும்பப் பாதுகாப்பு இன்சூரன்ஸ் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் கழிவறை, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000/- உதவி, கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசப் பரிசோதனை, 6000/- ரூபாய் உதவி, ஏழைப்பெண்கள் அனைவருக்கும் இலவச கேஸ் இணைப்பு, விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் ஓய்வூதியத்திட்டம், மிக மிக மேம்படுத்தப்பட்ட பயிர்காப்பீட்டு இன்சூரன்ஸ் திட்டம், மீனவர்களுக்கு 80% சதவிகித மானியத்தில் ஆழ்கடல் மீன்பிடிப் படகு, சூரிய ஒளி பயன்பாட்டிற்கு சலுகைகள், 36 கோடி ஏழைகளுக்கு கட்டணமில்லாத வங்கிக் கணக்குகள், ஸ்மார்ட் கார்டு மூலம் போலி ரேஷன் கார்டு ஒழிப்பு என எத்தனையோ மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசை, 2014-2019-ல் மட்டும் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களுக்கு 5,20,000 கோடி ஒதுக்கிய மத்திய அரசை ஒரு நாளாவது ஸ்டாலின் பாராட்டி வரவேற்றிருக்கிறாரா?

எனவே, இனிமேலாவது சுயவிளம்பரங்களுக்காக போராட்டங்கள் அறிவிப்பதை விடுத்து, மக்களுக்கு பயனுள்ள செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள திமுக முன் வர வேண்டும். எதிர்க்கட்சி என்பது, எதிரிக்கட்சி அல்ல என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும். தமிழக மக்களை ஏமாற்றிய காலம் மலையேறி விட்டது. மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். எப்போது தமிழ்க்கடவுள் முருகனை கொச்சைப்படுத்துவதை வேடிக்கையாக பார்த்தீர்களோ, அப்போதே உங்கள் “திராவிட மாயை” மக்களுக்குப் புரிந்து விட்டது. இனியும் திராவிடம் பேசி தமிழர்களை ஏமாற்ற முடியாது”.

இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x