Published : 21 Jul 2020 01:07 PM
Last Updated : 21 Jul 2020 01:07 PM

கஷ்டத்தில் திமுக தொண்டர்; கைகொடுத்த சிங்கப்பூர் நண்பர்!- முகநூல் வழியே இப்படியும் செய்ய முடியும்

காரைக்குடி

முகநூல் வழியே பலபேர் எப்படி எல்லாமோ வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் அதைச் சரியாகப் பயன்படுத்திப் பலருக்கும் நல்லது நடக்கக் காரணமாகிறார்கள். அதற்கு உதாரணம்தான் இந்த அண்மைச் சம்பவம்.

காரைக்குடி திமுகவில் வட்டத் துணைச் செயலாளராக இருப்பவர் கவிஞர் கலைமணி. காலம் காலமாகக் கட்சிக்கு உழைத்துத் தேய்ந்துபோன கலைமணி, இப்போது கஷ்ட ஜீவனத்தில் காலம் தள்ளுகிறார். ஆம்னி பேருந்து அலுவலகம் ஒன்றில் டிக்கெட் புக்கிங் வேலை பார்த்து, அந்த வருமானத்தில் அரைகுறை கஞ்சி குடித்துக் கொண்டிருந்த கலைமணிக்கு கரோனாவால் அதுவும் நின்றுபோனது. கடந்த 4 மாதங்களாகப் பேருந்துகள் எதுவும் ஓடாததால் கலைமணிக்குப் பிழைப்புக்கு வழியில்லை. கட்டிய வேட்டியைத் துவைத்துக் கசக்கக்கூட வழியில்லாத நிலையில், யாராவது உதவ மாட்டார்களா என்று நினைத்து ஆம்னி பேருந்து அலுவலக வாசலிலேயே முடங்கிக் கிடந்தார். அப்போதுதான் இந்தச் சம்பவமும் நடந்திருக்கிறது.

இரண்டு தினங்களுக்கு முன்பு இரவில் அந்த ஆம்னி பேருந்து அலுவலகம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு பக்கத்து டீக்கடையில் டீ அருந்த வந்திருக்கிறார் சிவகங்கை மாவட்ட திமுக பொறியாளர் அணியின் துணைச் செயலாளர் சொக்கு. அப்போது காரில் மு.க.ஸ்டாலின் படம் இருப்பதைப் பார்த்துவிட்டுத் தயங்கியபடியே அவரிடம் வந்திருக்கிறார் கலைமணி.

பிறகு நடந்தவற்றைச் சொக்குவே சொல்கிறார்; “எனக்குப் பக்கத்தில் வந்த கலைமணி தன்னைப் பற்றியும் உடம்பில் வலுவிருந்த காலத்தில் தாங்கள் எல்லாம் திமுகவுக்காக எப்படி எல்லாம் உழைத்தோம் என்பது பற்றியும் சிலாகித்துப் பேசினார். அவரது பேச்சில் உண்மை இருந்தது. அவருக்கு ஏதாவது உதவ வேண்டும் என நினைத்தேன். என்ன வேண்டும் என நான் கேட்பதற்கு முன்பாக அவரே, ‘உங்களால் முடியும்னா எனக்கு இன்னைக்கி ராத்திரி சாப்பாட்டுக்கு மட்டும் ஏதாச்சும் உதவ முடியுமா?’ன்னு கேட்டார். அவரிடம் 200 ரூபாயைத் தந்துவிட்டு நகர்ந்தேன். அதற்கே அவரது முகத்தில் அத்தனை பிரகாசம்.

வீட்டுக்கு வரும் வழியில் இதைப் பற்றி யோசித்துக் கொண்டே வந்தேன். முகம் தெரியாத நபர்களுக்கு எல்லாம் கழகத் தலைமையிலிருந்து லட்ச லட்சமாய் உதவுகிறார்களே. கட்சியின் ஆணி வேராய் இருக்கும் இந்தத் தொண்டனைக் கண்டுகொள்ள ஆளில்லையே என எனக்குள் ஒரு வருத்தம். அந்த வருத்தத்தை அப்படியே எனது முகநூல் பக்கத்தில் பதிந்தேன்.

அதைப் படித்துவிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கே சிங்கப்பூரிலிருந்து எனது முகநூல் நண்பர் நரசிம்மன் நரேஷ் வாட்ஸ் அப் காலில் வந்துவிட்டார். அவரும் திமுககாரர்தான், கலைஞர் இறந்த சமயத்தில் அஞ்சலி செலுத்துவதற்காகக் குடும்பத்தோடு சென்னைக்குப் பறந்து வந்தவர். அப்படிப்பட்டவருக்குத் திமுக தொண்டன் ஒருவன் அடுத்தவேளை சாப்பாட்டுக்குக் கஷ்டப்படும் நிலையில் இருக்கிறான் என்றதும் தாங்க முடியவில்லை. முகநூலில் படித்ததுமே லைனில் வந்துவிட்டார். போன் அடித்த பிறகுதான் இங்கே அதிகாலை நேரம் என்பதே அவருக்கு உரைத்திருக்கிறது. சுதாரித்துக் கொண்டவர், மீண்டும் 8 மணிக்கு அழைப்பதாகச் சொல்லி போனை கட் செய்தார்.

சொன்னது போலவே சரியாக காலை 8 மணிக்கு லைனில் வந்த நரசிம்மன் நரேஷ், கலைமணி விஷயம் குறித்து கவலையோடு பேசினார். ‘அந்தத் தொண்டனுக்கு எங்களது சிங்கை சிங்கங்கள் சார்பில் எதாவது உதவி செய்ய நினைக்கிறோம். உங்களது வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் எனக்கு அனுப்பி வையுங்கள்’ என்று சொன்னார். நான் எனது வங்கிக் கணக்கு எண்ணை அனுப்பி வைத்த அடுத்த ஒரு மணி நேரத்தில் எனது கணக்கிற்கு 15 ஆயிரம் ரூபாயை அனுப்பி இருந்தார் நரசிம்மன். அதைப் பார்த்ததும் உண்மையிலேயே நெகிழ்ந்து போனேன்.

உடனே, அந்தப் பணத்தை ஏடிஎம்மில் எடுத்துக் கொண்டு திமுக இலக்கிய அணி மாநிலத் தலைவர், முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் மற்றும் நகர திமுக செயலாளர் குணசேகரன், துணைச் செயலாளர் கண்ணன் உள்ளிட்டவர்களை அழைத்துக் கொண்டு கலைமணியின் இருப்பிடத்துக்கே சென்றேன். உடன் பிறப்புகளை ஒட்டுமொத்தமாகப் பார்த்ததும் கலைமணி முகத்தில் இன்னும் பிரகாசம். தென்னவன் கையிலிருந்து அந்த 15 ஆயிரம் ரூபாயை வாங்கியதும் கண் கலங்கிவிட்டார் கலைமணி.

நகரச் செயலாளரும், தென்னவனும் தாங்கள் எடுத்து வந்திருந்த வேட்டி, துண்டுகளையும் அவருக்குக் கொடுத்தார்கள். கலைமணியின் நிலையைப் பார்த்துவிட்டு தென்னவன் தனியாக 2 ஆயிரம் ரூபாயைக் கையில் கொடுத்தார். அனைத்தையும் வாங்கிக் கொண்டு நன்றிப் பெருக்குடன் எங்களைப் பார்த்தார் கலைமணி. அவரை கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு நாங்கள் அங்கிருந்து நகர்ந்தோம்.

வீட்டுக்கு வரும் வழியிலேயே நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் நரசிம்மன் நரேஷுக்குத் தெரிவித்தேன்; அவரும் நிம்மதியடைந்தார். இந்தக் கரோனா காலத்தில் இதுபோல இன்னும் எத்தனை திமுக தொண்டர்கள் இப்படிக் கஷ்டத்தில் இருக்கிறார்களோ என்ற கவலை இப்போது என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது”
என்று சொல்லி முடித்தார் சொக்கு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x