Published : 21 Jul 2020 12:52 PM
Last Updated : 21 Jul 2020 12:52 PM

பக்ரீத் பண்டிகை; குர்பானி ஆடுகள் விற்பனைக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

சென்னை

பக்ரீத் பண்டிகை ஆகஸ்டு 1-ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், குர்பானிக்காக செம்மறி ஆடுகள் விற்பனை செய்ய முடியாமல் ஆடு வளர்ப்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

உலகெங்கும் இஸ்லாமியர்களால் ஹஜ் பெருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தங்கள் வேண்டுதலுக்காக இஸ்லாமியர்கள் ஆட்டை வெட்டி குர்பானி கொடுப்பது வழக்கம். தமிழகத்தில் அதிகமாக ஆடுகள் வெட்டப்படும். இந்த மாதத்தில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகும்.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலால் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பக்ரீத் பண்டிகைக்கு ஆடு விற்பனை செய்வதற்குச் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து குர்பானி ஆடுகளை விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா விடுத்துள்ள அறிக்கை:

“இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்படுவதோடு இந்த நாளில் புத்தாடை அணிந்தும், தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாகப் பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இதனை ஈகைத் திருநாள் என்றும் கூறுவர்.

அந்த வகையில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகை ஆகஸ்ட் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இஸ்லாமியர்கள் கூட்டாகவோ, தனியாகவே ஆடுகளை அறுத்து இறைச்சியை உறவினர்கள், ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்து பண்டிகை கொண்டாடுவது வழக்கம். பண்டிகைக்கு இன்னும் 10 தினங்களே இருந்த போதிலும், ஆடுகள் வாங்கி குர்பானி கொடுப்பதில் மிகுந்த சிரமத்திற்கு இஸ்லாமியர்கள் ஆளாகியுள்ளனர்.

பக்ரீத் காலங்களில் ஆடுகளை தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் கொண்டு வந்து மொத்தமாக விற்பனை செய்வது வழக்கம். தற்போது கரோனா வைரஸ் தொற்றால் பிற மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு ஆடுகளைக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குர்பானி அளிப்பதற்காக வளர்த்த ஆடுகளை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு அதன் வளர்ப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்களின் கடமையான குர்பானியை நிறைவேற்றும் வகையில், குர்பானி ஆடுகளை விற்பனை செய்வதில் அரசு காலதாமதம் செய்யாமல் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்”.

இவ்வாறு முஸ்தபா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x