Published : 21 Jul 2020 10:51 AM
Last Updated : 21 Jul 2020 10:51 AM
காலை சிற்றுண்டி திட்டம் ராஜீவ் காந்தி பெயரில் உள்ளதா? கருணாநிதி பெயரில் உள்ளதா என்ற சர்ச்சை புதுச்சேரி சட்டப்பேரவையில் எழுந்தது. ஆளும் காங்கிரஸ் அரசு - அமைச்சர்களை கண்டித்து கூட்டணி கட்சியான திமுக வெளிநடப்பு செய்தது. இவ்விவகாரத்தை எழுப்பிய அதிமுகவும் வெளிநடப்பு செய்தது.
புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகள் இன்று (ஜூலை 21) தொடங்கியது. முதலில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்ட்டது. அதில், முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ், பாரதிதாசன் மகன் மன்னர் மைந்தன், முன்னாள் ஆளுநர் ஜா, தமிழக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கியதும் அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் அன்பழகன் பேசுகையில், "பட்ஜெட்டில் 13-வது பக்கத்தில் மேம்படுத்தப்பட்ட ராஜீவ் காந்தி காலை சிற்றுண்டி திட்டம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். 45-வது பக்கத்தில் காலை பால் வழங்கும் திட்டத்தை மேம்படுத்தப்பட்ட டாக்டர் கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டமாக விரிவுப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் முதலில் உள்ளது உண்மையா? பின்னர் உள்ளது உண்மையா?
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு புதுச்சேரியில் சிலை வைக்க கோரினோம். செய்யவில்லை. அதற்கு பிறகு கருணாநிதி மறைந்தார். அவர் மறைவுக்குப் பிறகு சிலை அமைக்கக் கமிட்டியும், பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைத்துள்ளீர்கள். சாலைக்கு பெயர் அறிவிப்பு வெளியிட்டீர்கள். ஜெயலலிதாவுக்கு இல்லை. அரசியல்ரீதியில் அநாகரிகம். முதல்வர் பொதுவானவராக செயல்பட வேண்டும்.
கடந்த 2002-ல் காங்கிரஸ் ஆட்சியில் ராஜீவ்காந்தி பெயரில் சோனியா காந்தி புதுச்சேரியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். ராஜீவ் காந்தி பெயரில் தொடங்கிய இத்திட்டத்தை மாற்றி உள்ளீர்கள். ஸ்டாலினும் உண்மை தெரியாமல் பாராட்டுகிறார். காலை உணவு திட்டம் ராஜீவ் காந்தி பெயரில் உள்ளதா? கருணாநிதி பெயரில் உள்ளதா?” என்றார்.
அப்போது, "இது அரசியல் செய்யும் இடமில்லை" என, முதல்வர் நாராயணசாமி கூறினார்.
இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து சிவா (திமுக) பேசுகையில், "நாங்கள் கருணாநிதிக்கு சிலை வைக்க கோரிக்கை வைக்கவில்லை. சிலை வைப்பதாக அறிவித்தீர்கள். ஆனால் சிலை கமிட்டி இதுவரை ஒரு முறைக்கூட கூட்டப்படவில்லை. அதேபோல் சாலைக்கு பெயர் அறிவித்து நடைமுறையாகவில்லை. இப்போதும் காலை உணவு திட்டத்துக்கும் பெயர் வைக்க நாங்கள் கேட்கவில்லை. அமைச்சர்கள் தூண்டிவிட்டுதான் சிலர் இதுபற்றி பேசுகிறார்கள். அதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்" என்றார்.
இதையடுத்து, ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து கூட்டணி கட்சியான திமுக எம்எல்ஏக்கள் சிவா, கீதா, வெங்கடேசன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
இவ்விவகார விவாதத்தில் ஆட்சேபணைக்குரிய வார்த்தைகள் நீக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment