Published : 21 Jul 2020 10:28 AM
Last Updated : 21 Jul 2020 10:28 AM

மின்கட்டண விவகாரம்: ஸ்டாலின் உள்ளிட்டோர் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்; தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்

கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின்

சென்னை

தமிழக அரசு மின் கட்டணக் கொள்ளையடிப்பதாகக் கூறி, அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக் கொடியேந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் கடந்த 16-ம் தேதி காணொலி காட்சி வாயிலாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், கரோனாவைக் கட்டுப்படுத்துவது, தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்வது, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், கரோனா ஊரடங்கு காலத்தில் மின்சாரத்தை கூடுதலாகப் பயன்படுத்தியதாக, மின்கட்டணத்தை பல மடங்கு வசூலிப்பதாக, அதனைக் கண்டித்து ஜூலை 21 அன்று வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி போராட வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது

அதன்படி, இன்று (ஜூலை 21) தமிழகம் முழுவதும் திமுகவினர் தங்களின் இல்லங்களின் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார். கையில் கறுப்புக்கொடியை ஏந்தி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார். தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினார். தன் கையில், 'ஷாக் அடிப்பது மின்சாரமா, மின்கட்டணமா?' என எழுதப்பட்ட வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியிருந்தார்.

போராட்டத்தின்போது, 'ரீடிங்' எடுத்ததில் உள்ள குழப்பங்களை நீக்கி, மின் நுகர்வோருக்குச் சாதகமான முறையில் கணக்கிட்டு, ஊரடங்கு கால மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை எளிய மாதத் தவணையாகச் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரியும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மத்தியப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் கரோனா கால மின் கட்டணச் சலுகையை அளித்துள்ள நிலையில், அதிமுக அரசு மட்டும் மின் கணக்கீட்டின் அடிப்படையில் கட்டணத்தைச் செலுத்தியே ஆகவேண்டும் என்று சுமையை ஏற்றுவது கருணையற்ற போக்கு எனக்கூறி முழக்கங்களை எழுப்பினர்.

அதேபோன்று, மக்களவை திமுக எம்.பி. கனிமொழி, சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x