Published : 20 Jul 2020 07:01 PM
Last Updated : 20 Jul 2020 07:01 PM

கோவை - பெங்களூரு இரவு நேர ரயிலை இயக்கப் பரிந்துரை: பி.ஆர்.நடராஜன் எம்.பி. வரவேற்பு

கோவை - பெங்களூரு இரவு நேர ரயில் சேவை, கோவை - ராமேஸ்வரம், கோவை - திருநெல்வெலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவற்றை இயக்க ரயில்வே ஆணையத்திற்குத் தென்னக ரயில்வே பரிந்துரை அனுப்பியது வரவேற்கத்தக்கது என்று கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறியிருக்கிறார்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் ரயில் சேவை முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இதன் காரணமாகவே அதிக வருவாய் ஈட்டிக் கொடுக்கிற ரயில் நிலையமாகவும் கோவை இருந்து வருகிறது. தொழில், கல்வி, மருத்துவம் ஆகிய தேவைக்காகப் பிற மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்கள் கோவை மாவட்டம் வந்து செல்கின்றனர். இருப்பினும் போதிய ரயில் சேவை இல்லை. எதிர்க்கட்சிகள் இதை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கின்றன.

இந்நிலையில், கோவை - பெங்களூரு இரவு நேர ரயில் சேவை உள்ளிட்ட முக்கிய ரயில்களை இயக்க ரயில்வே ஆணையத்துக்குத் தென்னக ரயில்வே பரிந்துரை அனுப்பியிருக்கிறது.

இதுகுறித்து பி.ஆர். நடராஜன் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை - பெங்களூரு இரவு நேர ரயில் சேவை, கோவை -ராமேஸ்வரம், கோவை - திருநெல்வெலி எக்ஸ்பிரஸ், திருநெல்வெலி - மதுரை பயணிகள் ரயில் கோவை வரை நீட்டிப்பு, கோவை - தென்காசி, கோவை - தூத்துக்குடி ஆகிய கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்வைத்து வந்தேன். இந்நிலையில் கோவை - பெங்களூரு இரவு நேர ரயில், கோவை -ராமேஸ்வரம், கோவை - திருநெல்வெலி எக்ஸ்பிரஸ், திருநெல்வெலி - மதுரை பயணிகள் ரயில் கோவை வரை நீட்டிப்பு ஆகியவற்றை ரயில்வே ஆணையத்துக்குத் தென்னக ரயில்வே பரிந்துரை செய்துள்ளதைக் கோவை மக்களின் சார்பில் வரவேற்கிறேன்.

கரோனா காலத்தில் ரயில்களை இயக்குவதற்குத் தாமதம் ஆனாலும், ரயில்வே ஆணையம் உடனடியாக இந்தப் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், கோவை - தென்காசி, கோவை - தூத்துக்குடி ஆகிய இரண்டு ரயில்களை இயக்குவதற்கான கோரிக்கையைத் தென்னக ரயில்வே பரிந்துரை செய்யாதது வருத்தம் அளிக்கிறது. இவற்றின் தேவையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மத்திய பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட மங்களூரு - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பது என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரையில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. உடனடியாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தரைப்பாலம், ரயில்வே மேம்பாலங்களை விரைவில் கட்டி முடிக்க வேண்டும். கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்துவது, பீளமேடு, சோமனூர், இருகூர், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடையின் நீளத்தை அதிகரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும்''.

இவ்வாறு பி.ஆர். நடராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x