Published : 20 Jul 2020 06:02 PM
Last Updated : 20 Jul 2020 06:02 PM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கி, கறுப்பர் கூட்டத்தை ஆதரித்தது போன்று அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சட்டத்துறை செயலர் ஆர்.எஸ்.பாரதி காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாகக் காணொலி பதிவிட்டதாக எழுந்த புகாரின் பேரில், கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளைக் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் கறுப்பர் கூட்டத்தின் செயலுக்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ஒன்றைத் தொடங்கி கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு ஆதரவு என்றும், அவர்களுக்கு சட்டபூர்வமான ஆதரவு அளிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டது போன்று போலியான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதுகுறித்து திமுக சார்பில் நேற்று பேட்டி அளித்த ஆர்.எஸ்.பாரதி, ''கறுப்பர் கூட்டத்தின் செயலை திமுக எதிர்க்கிறது. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் ஆதரித்தது போன்ற தோற்றத்தை போலி ட்விட்டர் மூலம் உருவாக்கியுள்ளது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காவல் ஆணையரிடம் புகார் அளிப்போம்'' எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலை இன்று சந்தித்த ஆர்.எஸ்.பாரதி புகாரை அளித்தார். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையருக்கு அளித்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:
''திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவப்பெயரை உண்டாக்கும் விதத்தில் அவர் பெயரில் போலி ட்விட்டர் கணக்குத் தொடங்கி, கறுப்பர் கூட்டத்தை ஆதரிப்பதாகவும், சட்டபூர்வ உதவியை திமுக அளிக்கும் என்றும் போலியாகப் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்தோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பெயரில் போலிக் கணக்குத் தொடங்கி அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு மட்டும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை.
கறுப்பர் கூட்டத்திற்கு எந்த விதத்திலும் திமுக ஆதரவு தெரிவிக்கவில்லை. நான் கூறுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவதும் ஒரே கருத்துதான். கறுப்பர் கூட்ட விவகாரத்தில் யார் சொன்னால் என்ன? நான் சொன்னால் ஸ்டாலின் சொன்ன மாதிரி. எனவே திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளோம். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை கண்டிப்பாக நாடுவோம்''.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT