Published : 20 Jul 2020 05:06 PM
Last Updated : 20 Jul 2020 05:06 PM
இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் இந்து மக்களின், தமிழகத்தின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளின் மீது நடைபெறும் தாக்குதலாகவே கருதுகிறேன். கோயில்களுக்கு மக்கள் இறை வழிபாட்டிற்கு வருவதைத் தடுத்திட, அல்லது அச்சத்தை ஏற்படுத்திட இவை நடைபெற்றதா? என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாஜக தலைவர் எல்.முருகன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“கோயம்புத்தூரில் மாகாளியம்மன் கோயில், விநாயகர் கோயில், சங்கமேஸ்வரர் கோயில் செல்வ விநாயகர் கோயில் என நான்கு கோயில்கள் முன்பாக டயர்களை எரித்து நாச வேலை செய்தது, கோயில் முன்பாக மக்கள் வணங்கும் சூலாயுதம் போன்றவற்றைச் சேதப்படுத்துவது என நடந்த சம்பவங்கள் மிகுந்த மனவேதனையை அளிக்கின்றன.
இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் இந்து மக்களின், தமிழகத்தின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளின் மீது நடைபெறும் தாக்குதலாகவே கருதுகிறேன். கோயில்களுக்கு மக்கள் இறை வழிபாட்டிற்கு வருவதைத் தடுத்திட, அல்லது அச்சத்தை ஏற்படுத்திட இவை நடைபெற்றதா? இல்லையென்றால் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்துவோம், தமிழ்க் கடவுள் முருகனை அவமதிப்போம், உங்களால் என்ன செய்ய முடியும் என்ற ஆணவப்போக்கா? எப்படி என்றாலும், இது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்குச் செய்யும் நம்பிக்கைத் துரோகமாகும்.
இந்து மதத்தைப் பின்பற்றி கடவுள்களை வணங்கும் 90 சதவிகித மக்கள் வாழும் தமிழகத்திலே இந்த நிலையா? இதுபோன்ற தவறுகள் செய்தவர்களை மட்டுமின்றி, இந்த சதிச் செயலுக்குப் பின்னால் இருந்து ஊக்கப்படுத்தும் தீய சக்திகளுக்கும், பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் ஊறு விளைவிக்கும் அமைப்புகளுக்கும், தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இந்த நிகழ்வு தொடர்பாக சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது. இவரைப் பார்க்கும்போது, இவர் ஒருவரே நான்கு கோயில்களிலும் டயர்களை எரித்து, கோயிலைச் சேதப்படுத்தியிருப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது. இவருடன் சென்ற கும்பலில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை முழுமையாகக் கண்டறிய வேண்டும்.
போலி மதச்சார்பின்மை பேசி மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தக்க சமயத்தில் அவர்களுக்கு மக்களே தீர்ப்பளிப்பார்கள்”.
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT