Published : 20 Jul 2020 01:36 PM
Last Updated : 20 Jul 2020 01:36 PM
குடியாத்தம் தனித் தொகுதி இடைத்தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்புப் பணி இன்று தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காகப் பெங்களூருவில் இருந்து வந்திருந்த பெல் நிறுவனப் பொறியாளர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதியானதால் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்புப் பணி உடனடியாக நிறுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தனித் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காத்தவராயன், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனால் குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் காலியாக இருந்த குடியாத்தம் உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளைத் தொடங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளைச் செய்தது.
திமுக எதிர்ப்பு
வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டம் ஜூலை 14-ம் தேதி நடைபெற்றது. இதில், பங்கேற்ற திமுக பிரதிநிதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சகி, இடைத்தேர்தலுக்கான முதல்நிலைப் பணிகளைத் தொடங்க எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுக பிரதிநிதியாகப் பங்கேற்ற வேலூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் மூர்த்தி, கட்சித் தலைமையை ஆலோசித்துத் தகவல் கூறுவதாகத் தெரிவித்தார். பிற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் நிலை சரிபார்ப்புப் பணியை மேற்கொள்ள ஆதரவு தெரிவித்தனர்.
291 வாக்குச்சாவடிகள்
குடியாத்தம் தனி தொகுதியில் உள்ள 291 வாக்குச் சாவடிகளில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 46 ஆண்கள், 1 லட்சத்து 44 ஆயிரத்து 72 பெண்கள், 28 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 146 வாக்காளர்கள் உள்ளனர். இடைத்தேர்தலில் பயன்படுத்துவதற்காகத் தலா 800 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மின்னணு கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் கருவிகளை வேலூர் டோல்கேட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கிடங்கில் வைத்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் இன்று (ஜூலை 20) தொடங்கி 15 நாட்களுக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்புப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டிருந்தனர்.
பொறியாளருக்குக் கரோனா
இதற்காக பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்த பொறியாளர்கள் 4 பேர் கடந்த சனிக்கிழமை (ஜூலை 18-ம் தேதி) வேலூர் வந்தனர். அவர்களுக்குக் கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில் ஒருவருக்குக் கரோனா தொற்று இன்று (ஜூலை 20-ம் தேதி) உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்ற மூவரும் தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் மறு உத்தரவு வரும்வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்புப் பணியை நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT