Published : 20 Jul 2020 12:47 PM
Last Updated : 20 Jul 2020 12:47 PM
தினம் தினம் கரோனா பரவல் குறித்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. ஆனால், முதல்வர் சமூகப் பரவல் இல்லை என்று கீறல் விழுந்த ரெக்கார்டு போல் பேசி, முன்கள வீரர்களான மருத்துவர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலையை அரசு உருவாக்கியுள்ளது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு இன்று எழுதிய கடிதம்:
''நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
திமுக எனும் மிகப்பெரும் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பிலே உங்களால் உங்களுக்காக அமரவைக்கப்பட்டிருந்தாலும், நான் எப்போதும் உங்களில் ஒருவன்தான். ஏற்றம் தரும் அந்த எளிமை உணர்வைத்தான் ஒவ்வொரு உடன்பிறப்பின் நெஞ்சிலும் சதா சர்வ காலமும் ஊட்டி வளர்த்திருக்கிறார் நம்மை வழிநடத்தும் கலைஞர்.
கரோனா எனும் உலகை உலுக்கும் நோய்த்தொற்றின் காரணமாக, இந்த ஊரடங்குக் காலத்தில் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு முன்புபோல் அமையவில்லையே என்ற ஏக்கத்தைப் போக்கிடும் வகையில், ஒவ்வொரு நாளும் காணொலி வாயிலாகக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடுவதில் ஓரளவு மனதுக்கு நிம்மதி.
அந்த நிம்மதிகூட நிலைத்திடாத வகையில், கரோனா பரவல் பற்றிய செய்திகள் அனுதினமும் வேதனை தருகின்றன. இந்தியாவில் 10 லட்சத்தைக் கடந்துள்ள நோய்த் தொற்று, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டரை லட்சத்திற்கும் மேலானவர்களைப் பாதித்துள்ளது என்று இந்திய மருத்துவக் கழகம் தெரிவித்திருப்பதுடன், நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேருக்குக் குறையாமல் கரோனாவால் பாதிக்கப்படுவது என்பது இந்தியாவுக்கு மோசமான அறிகுறியாகவே தெரிகிறது. இது, சமூகப் பரவல் கட்டத்தை நாம் அடைந்துவிட்டோம் என்பதைக் காட்டுகிறது” என்று எச்சரிக்கை மணி அடித்துள்ளார் IMA (Hospital Board of India) தலைவர் டாக்டர் வி.கே.மோங்கா.
கேரள முதல்வர் பினராயி விஜயனும் திருவனந்தபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் கரோனா நோய்த்தொற்று சமூகப் பரவலாக மாறியிருப்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். ஒப்பீட்டளவில், தமிழ்நாட்டைவிட கேரளாவில் நோய்த்தொற்று எண்ணிக்கை குறைவு. கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகம். அப்படியிருந்தும், அங்கே சமூகப் பரவல் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த அரசு இயங்குகிறது.
தமிழ்நாட்டிலோ, எல்லாவற்றையும் மூடிமறைத்து - மக்களுக்கு மட்டுமின்றி முன்கள வீரர்களான மருத்துவத்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கி - கரோனா காலத்திலும் கொள்ளை அடிப்பதையே குறியாகக் கொண்ட ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சீனாவைவிடச் சென்னையில் நோய்த்தொற்று அதிகம் எனப் புள்ளி விவரங்கள் வெளிப்படுத்தினாலும், தன்னைச் சுற்றியுள்ள அமைச்சர்களுக்கே கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டாலும் முதல்வர் பழனிசாமி, “தமிழ்நாட்டில் சமூகப் பரவல் இல்லை. கரோனா விரைவில் ஒழிந்துவிடும்” என்பதை மட்டுமே 'கீறல் விழுந்த கிராமபோன் ரெக்கார்டு' போல, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்.
ஆனால், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரிப்பதுடன், உயிரிழப்பும் ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு என்கிற எண்ணிக்கைக்கு வந்துவிட்டது. நோய்த்தொற்றால் மக்களிடம் அச்ச உணர்வு அதிகரித்து, ஊரடங்கால் அவர்களின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது.
மக்கள் நலனில் அக்கறையற்ற ஆட்சியாளர்கள் வாய்க்கப் பெற்றுள்ள தமிழகத்தில், மக்களுக்கான பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கமாகத் திமுக திகழ்வதை இந்தக் கரோனா காலத்தில் பொதுமக்கள் அனைவரும் உணர்ந்திடும் வகையில், ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தின் மூலம் பசித்துயர் நீக்கி - பாதுகாப்பு சாதனங்களை வழங்கி தன் பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டதை நாடும் ஏடும் போற்றின.
இன்னமும் பல இடங்களிலும் திமுகவினரின் உதவும் கரங்கள் மக்களின் துயர் துடைத்து வருகின்றன. அவற்றை அன்றாடம் நடைபெறும் காணொலிச் சந்திப்புகள் வாயிலாக அறிந்து மகிழ்ந்து வருகிறேன். உங்கள் திருமுகம் காணும்போது நான் உவகை கொள்கிறேன்.
உங்களில் ஒருவனான என்னோடு உரையாடுவதில் நீங்கள் மகிழ்கிறீர்கள். இந்தச் சந்திப்புகள் நம் இதயங்களுக்குத் தருகிற நம்பிக்கையும் ஊக்கமும் உற்சாகமும் நிலைத்திட வேண்டும் என்று எதிர்பார்த்தாலும் நிலைமை அத்தகையதாய் இல்லை.
நேற்று காணொலியில் உரையாடிய ஓர் உடன்பிறப்பு, இன்று நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார் எனச் செய்தி வரும்போது நெஞ்சம் பதறுகிறது. உடனடியாக அவர்களைத் தொடர்புகொண்டு நம்பிக்கையும் ஆறுதலும் தெரிவிப்பதுடன், அவர்களின் குடும்பத்தாரிடமும் பேசி, அவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடமும் நாள்தோறும் பேசி நலன் தெரிந்துகொள்வதையே முதன்மையான பணியாகக் கொண்டிருக்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமையான ஜூலை 19-ம் தேதி அன்று ஒரு நாளில் மட்டும் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், ராணிப்பேட்டை காந்தி, வேலூர் கார்த்திகேயன் என திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூவர் கரோனா தொற்றுக்குள்ளானதை அறிந்ததும் வேதனையும் மனச்சோர்வும் அதிகமானது. என்ன செய்வதென்று அறியாமல், எனது அறையிலிருந்த தலைவர் கலைஞரின் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
"எத்தனையோ சோதனைகளை - மேடு பள்ளங்களை தீரத்துடன் எதிர்கொண்டு இந்த இயக்கத்தை வளர்த்தவராயிற்றே.. அந்த வலிமையில் கொஞ்சம், ஓர் குன்றிமணி அளவேனும் தாருங்கள் தலைவரே." என்று மனதளவில் இரவல் கேட்டு வாங்கி, துணிவைத் துணையாக்கிக் கொண்டு மூவரையும் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். மருத்துவர்களிடம் பேசி, சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தேன். எப்போதும்போல் கட்சி துணை நிற்கும் என்ற உறுதியினையும் நம்பிக்கையினையும் வழங்கினேன். இந்த உறவுக்குப் பெயர்தானே திமுக.
அண்ணா உருவாக்கிய இந்த பாசப் பிணைப்பை, உடன்பிறப்பு எனும் சொல்லால் என்றும் வலுவிழக்காத உறுதிமிக்கதாய் ஆக்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். உங்களைப் போலவே நானும் அவரைத் ‘தலைவரே’ என்றே அழைத்துப் பழக்கப்பட்டவன்.
'அப்பா' என்கிற குடும்ப உரிமையைவிட, 'தலைவரே' என்கிற கொள்கை உறவும் உணர்வும் அதிகம் இருந்ததால்தான் இன்று உங்களில் ஒருவனாக, உங்கள் துணை கொண்டு, இந்த இயக்கத்தைத் தோளில் தாங்கிப் பயணம் செய்கிற வலிமையைப் பெற்றிருக்கிறேன்.
அதனால், உடன்பிறப்புகளாகிய உங்கள் ஒவ்வொருவரின் நலனிலும் அக்கறை கொள்கிறேன். சிறிதளவு உடல்நலக்குறைவு என்றாலும் மனம் பதறுகிறது. உடன்பிறப்புகளாகிய நீங்கள் இன்றி, நான் இல்லை, திமுக எனும் பேரியக்கம் இல்லை''.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT