Published : 19 Jul 2020 04:20 PM
Last Updated : 19 Jul 2020 04:20 PM
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசிடம் இருந்து முதல்வர் ரூ.3,000 கோடி நிதி உதவி கோரியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரோனா தடுப்பு பணிகள் குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்டார். அவர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கரோனா சிகிச்சை பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார்.
2-வது நாளாக இன்று (ஜூலை 19) நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, "கரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிப்பதற்கு அதிகாரப்பூர்வமான கோரிக்கையை விடுத்தால் அதற்கான அனுமதியை அரசு வழங்க தயாராக உள்ளது. கரோனாவுக்காக மத்திய அரசை எதிர்பார்க்காமல் தமிழக அரசு ரூ.6,000 கோடி அளவுக்கு நிதியினை செலவிட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசிடம் தமிழக முதல்வர் ரூ.3,000 கோடி நிதி உதவி கோரியுள்ளார். தமிழகத்தில் பிளாஸ்மா சிகிசை படிப்படியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2,000 ஆய்வக உதவியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டள்ளனர்.
கரோனா பரவலை தொடர்ந்து மருத்துவமனைகளில் 70 ஆயிரம் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1 லட்சம் பேர் கரோனா தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். அவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT