Published : 19 Jul 2020 03:50 PM
Last Updated : 19 Jul 2020 03:50 PM
புதுச்சேரி ஆட்சியை கலைக்க நினைத்தார் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஜூலை 19) செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் தினமும் ஏற்படும் கரோனா தொற்று நோய் பாதிப்பு மற்றும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி செயல்பட்டு வருகிறேன்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 18) துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் சென்று அவர் ஒரு காவல்துறை அதிகாரி போலவும், அங்குள்ள அதிகாரிகளும், மருத்துவர்களும் குற்றவாளிகள் போலவும் நினைத்துக் கொண்டு செயல்பட்டுள்ளார். ஆளுநர் ஆய்வுக்கு செல்லும்போது தலைமை செயலர், துறை செயலர் அல்லது துறை இயக்குநராவது இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இல்லாத நேரத்தில் கிரண்பேடி சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.
மருத்துவர்களை குற்றவாளிகள் போல் நடத்தியது, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 4 மாத காலமாக இரவு, பகல் பாராமல் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அவர்களை சோர்வடைய செய்துள்ளது. இதனால் விடுமுறை அல்லது போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆலோசித்து தெரிவித்தனர்.
நான், 'நீங்கள் கிரண்பேடிக்கு சேவை செய்யவில்லை. புதுச்சேரி மக்களுக்குத்தான் சேவை செய்கின்றீர்கள். கிரண்பேடி இன்று இருப்பார், நாளை சென்றுவிடுவார். எனவே அவர் கடுமையாக நடந்து கொண்டதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நீங்கள் விடுமுறை மற்றும் போராட்டம் போன்ற முடிவுகளை எடுக்க வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டேன்.
மருத்துவம் படித்தவர்களுக்கு மருத்துவம்தான் தெரியும், தகவல் தொழில்நுட்பம் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள். அதையும் மீறி கிரண்பேடி கேட்கும் கேள்விகளுக்கு நல்ல பதிலை மருத்துவர்கள் அளித்தால், உடனடியாக வேறு ஒன்றை கேட்கின்றார்.
ஆட்சியை கலைக்க நினைத்தார். அது முடியாததால் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். பட்ஜெட் போடாததால் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கூட காலத்தோடு வழங்க முடியவில்லை.
கடந்த 1 ஆம் தேதியில் இருந்து ஒரு ரூபாய்கூட அரசால் செலவு செய்ய முடியாத நிலை உள்ளது. பட்ஜெட்டுக்கு நான்கு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிபந்தனைகளால் புதுச்சேரி மாநிலம் பெரும் துன்பத்தை சந்திக்கும். இது குறித்து முதல்வர் தெளிவாக விளக்குவார்.
அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டு பெறுவதற்கு ஒரு முறை உள்ளது. கீழ் நிலையில் உள்ள பணியாளர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு அதிகாரிகளை படாதபாடு படுத்துவது சரியானது இல்லை. கிரண்பேடிக்கு தேவையான கரோனா தொடர்பான பகுப்பாய்வு முடிவுகளை துறை சார்ந்த நிபுணர்களை தான் கேட்க வேண்டும். நான் கேட்பதையெல்லாம் மருத்துவர்கள் தர வேண்டும் என நினைத்தால் கரோனாவை கட்டுப்படுத்த முடியாது.
100 நாட்கள் ராஜ்நிவாஸில் தூங்கி விட்டு திடீரென வந்து ஆய்வு நடத்துகிறார். ஆனால், மருத்துவர்களும், அதிகாரிகளும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை செய்கின்றனர். அதற்காக அவர்களது பணியை அங்கீகரிக்க வேண்டும், மோசமாக பேசக்கூடாது. நான் சொல்லும் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றித் தரப்போவதில்லை என்பதற்காக கிரண்பேடி என்னை சந்திக்க அனுமதி மறுத்து வருகிறார்.
கிரண்பேடியின் வலது, இடது பக்கம் இருப்பவர்கள் மூலம் தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், அதையும் சந்திக்க நான் தயாக உள்ளேன். ஆனால், லஞ்சம் தர மாட்டேன். கரோனா தடுப்புப் பணியை தன் மனம் போன போக்கில் மாற்றினால் புதுச்சேரி மக்களுக்கு தான் துன்பம் ஏற்படும். ஏற்கெனவே கதிர்காமம் மருத்துவமனையில் 600 படுக்கைகளில் 400 படுக்கைகள் நிரம்பி விட்டன. இன்னும் சில நாட்களில் முழுவதும் நிரம்பி விடும்.
இதனால் ஜிப்மரில் நோயாளிகளை அனுமதித்துக் கொள்ள கேட்டோம். ஜிப்மர் நிர்வாகம் கரோனா நோயாளிகளை ஜிப்மருக்கு அனுப்பக் கூடாது என்கிறது. அதே கருத்தை கிரண்பேடியும் பிரதிபலிக்கிறார். ஜிப்மர் நிர்வாகம் புதுச்சேரி மக்களுக்கு தானே இருக்கிறது. எனவே, கிரண்பேடி யார் என்பதை பொதுமக்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
ராஜ்நிவாஸை கோவிட் மருத்துவமனையாக மாற்றலாம். அவரது அறக்கட்டளைக்கு மறைமுகமாக ராஜ்நிவாஸில் இருந்து பணம் செல்கிறது. நான் ஊழலின்றி சுத்தமாக உள்ளேன். ராஜ்நிவாஸ் அதுபோல் இருக்க முடியாது" என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT