Published : 19 Jul 2020 03:03 PM
Last Updated : 19 Jul 2020 03:03 PM
கரூர் மாவட்டத்தில் பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தை, முதிய தம்பதி உள்ளிட்ட 8 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கரூர் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்த 19 வயது கர்ப்பிணி பிரசவத்திற்காக கடந்த 14-ம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 15-ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அந்த பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவருக்கு மருத்துவமனையிலேயே கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தாய்க்கு கரோனா தொற்று உறுதியானதால் பிறந்து 3 நாட்களேயான அவரது பெண் குழந்தைக்கு நேற்று (ஜூலை 18) கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இன்று (ஜூலை 19) வெளியான பரிசோதனை முடிவில் குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, குழந்தைக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கரூர் படிக்கட்டுத்துறையைச் சேர்ந்த 72 வயது கணவர், 63 வயது மனைவி என முதிய தம்பதி, தரகம்பட்டியில் கரோனா தொற்று உறுதியான கர்ப்பிணியுடன் தொடர்பிலிருந்த 40, 50 வயது பெண்கள் இருவர், அருகம்பாளையத்தைச் சேர்ந்த 50 வயது மற்றும் கரூரைச் சேர்ந்த 32 வயது பெண்கள், வஞ்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 42 ஆண் ஆகியோருக்கு நேற்று நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் இன்று வெளியான பரிசோதனை முடிவில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கரோனா தொற்று உறுதியானவர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT