Published : 19 Jul 2020 07:24 AM
Last Updated : 19 Jul 2020 07:24 AM
மேட்டூரிலிருந்து திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வரும் தண்ணீர் முக்கொம்பில் உள்ள தடுப்பணை மூலம் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் பிரித்து அனுப்பப்படுகிறது.
இங்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் தடுப்பணைகளில் உள்ள ஷட்டர்களை ஏற்றி இறக்க மின் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ள கட்டிடம் (பவர் ஹவுஸ்) 1977-ம் ஆண்டில் கட்டப்பட்டது.
இந்த கட்டிடத்தில் 100 கிலோ வாட் மின் திறன் கொண்ட மின் சாதனங்கள் மற்றும் 40 கிலோ வாட் மின் திறன் கொண்ட ஜெனரேட்டர் இயந்திரம் உள்ளிட்டவை உள்ளன.
இந்த கட்டிடம் தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில், சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில் ஆங்காங்கு விரிசல் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளது.
இதுகுறித்து முன்னோடி விவசாயி கவண்டம்பட்டி சுப்பிரமணியன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: இந்த பவர் ஹவுஸ் கட்டிடத்தின் உள்ளே மேற் கூரை சரிந்துள்ளதால், பல இடங் களில் சவுக்கு கட்டைகளைக் கொண்டு முட்டுக் கொடுத்துள்ளனர்.
இந்த பவர் ஹவுஸ் கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்து விட்டால், ஷட்டர்களை ஏற்றி இறக்க முடியாது. இதனால் நீரை ஒழுங்கு படுத்தி பாசனத்துக்கு வழங்க இயலாது போகும். அதிக அளவில் வெள்ளம் வந்தால் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்த கட்டிடத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “இந்த கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT