Published : 18 Jul 2020 07:20 PM
Last Updated : 18 Jul 2020 07:20 PM

காவல் அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் அமைச்சர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது; காவல்துறை செயலிழந்துள்ளது: ஸ்டாலின்  விமர்சனம்

சென்னை

உளவுத்துறை போலீஸார், சட்டம் ஒழுங்கு போலீஸார் எதிர்க்கட்சியினரைக் கண்காணிக்கும் பணிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகக் காவல்துறை முழுக்க அதிமுக அரசால் அரசியல் மயமாக்கப்பட்டு விட்டதால், கொலை, கொள்ளை, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என ஊரடங்கு காலத்திலும் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகில் உள்ள முடுக்கூரணி என்னும் ஊரில் ராணுவ வீரர் ஒருவரின் தாய் ராஜகுமாரி, மனைவி சினேகா ஆகியோர் கொலை செய்யப்பட்டு - அவர்களின் 7 வயதுக் குழந்தையின் கழுத்தில் கிடந்த நகை மற்றும் காலில் கிடந்த கொலுசுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் குளிர்சாதனப் பெட்டி (ப்ரீசர் பாக்ஸ்) இல்லாததால், லடாக் பகுதியில் இருந்து அவசரமாகச் சிவகங்கை திரும்பிய ராணுவ வீரர் ஸ்டீபன் இறந்துபோன தனது தாய் மற்றும் மனைவி ஆகியோரின் முகங்களைக் கூடப் பார்க்க முடியாமல் துயரம் அடைந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. கரோனா வைரஸை விடக் கொடுமையான சூழலை, நாட்டின் பாதுகாப்புப் பணியில் உள்ள ஒரு ராணுவ வீரருக்கு அதிமுக ஆட்சி ஏற்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

சிவகங்கையில் மட்டுமின்றி, அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் பகுதியில் 7 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை, தூத்துக்குடி கல்வினை கிராமம் பகுதியில் 7 வயதுச் சிறுமி படுகொலை, சமுதாயப் பிரச்சினைகளைத் தட்டிக்கேட்ட சென்னை அருகில் உள்ள திருநின்றவூர் செல்வராஜ் நகரில் மகேந்திரன் கொலை, சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு வெட்டிப் படுகொலை என தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்தடுத்து கொலை - கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஊரடங்கு காலத்தில் கூட அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பது கவலைக்குரியது.

அதிமுக ஆட்சியில் காவல்துறை முழுவதும் அரசியல்மயமாக்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உளவுத்துறைக்கு என்று தனியாகக் காவலர்கள் இருக்கிறார்கள். மாவட்ட அளவில் ஆய்வாளர்கள் தனியாக இருக்கிறார்கள். சென்னை மாநகரத்திலும் அதேபோல் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உளவுத்துறை காவலர்கள் இருக்கிறார்கள். மாநகர் சென்னையில் எஸ்.பி. அந்தஸ்தில் தனி உளவுப்பிரிவே இருக்கிறது.

ஆனால், இவர்கள் எல்லாம் தங்களுடைய பகுதிகளில் நடைபெறும் - அல்லது நடைபெறப் போகும் சட்டவிரோத காரியங்கள் - ரவுடிகளின் நடமாட்டங்கள் - சட்டம் ஒழுங்குப் பிரச்சினை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து. (“அலெர்ட் தகவல்”) தகவல் கொடுப்பதை அதிமுக ஆட்சியில் அறவே கைவிட்டு விட்டார்கள்.

இவர்களின் ஒரே வேலை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை உளவு பார்ப்பது மட்டுமே என்ற நிலையை அதிமுக ஆட்சி உருவாக்கி விட்டது. மாவட்டங்களில் உள்ள சட்டம் ஒழுங்கு போலீஸாரும் - உளவுத்துறை போலீஸாரும் ஏறக்குறைய ஒரே “கூட்டணியாக” மாற்றப்பட்டு - அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் சொல்வதைக் கேட்டால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

போலீஸ் துறையில் நடைபெறும் கீழ்மட்ட மாறுதல்களில் கூட மாவட்ட எஸ்.பி.க்கோ அல்லது டிஜிபிக்கோ அதிகாரம் இல்லாமல், அனைத்தும் இப்போது அதிமுக அமைச்சர்களிடமும், முதல்வர் அலுவலகத்திடமும் போய்விட்டது. அடுத்தகட்டத்தில் எஸ்.பி., டி.ஐ.ஜி., மண்டல ஐ.ஜி ஆகியோரை “பரிந்துரை” செய்யும் டிஜிபியின் அதிகாரம் இப்போது அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் பொறுப்பாளர்களாக அதிமுக நியமித்துள்ள அமைச்சர்களிடம் சென்றுவிட்டது.

முன்னர் திமுக ஆட்சியில் திறமை மிகுந்து விளங்கிய தமிழ்நாடு காவல்துறை, தற்போது பழனிசாமி ஆட்சியில் முற்றிலும் சீர்குலைக்கப்பட்டு; மக்களைப் பாதுகாக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுத் தடுமாறி நிற்கிறது. விளைவு, எங்குப் பார்த்தாலும் கொலைகள் - கொள்ளைகள்!

வாழ்வாதாரம் முடக்கப்பட்டுள்ள தாய்மார்கள் தமது வீட்டிற்குள்ளே கூட பாதுகாப்பாக இருக்க முடியவில்லை என்பதை காளையார்கோயில் கொலை - கொள்ளை நிரூபித்துள்ளது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், அதற்கு சி.எஸ்.ஆர். பெறுவது முடியாத காரியம் என்றும், அதிமுகவினர் மீது புகார் என்றால் எப்.ஐ.ஆர். கனவிலும் கிடைக்காது என்ற நிலையையும் ஏற்படுத்தி, காவல் நிலையங்களின் தனித்தன்மையை முற்றிலும் நாசப்படுத்தி விட்டது அதிமுக ஆட்சி. இதன் விளைவாகச் சட்டம் - ஒழுங்கா? – அது கிலோ என்ன விலை என்ற நிலையை முதல்வர் பழனிசாமி ஆட்சி ஏற்படுத்திவிட்டது.

ஆகவே, அரசியல் வேலைகளைக் கவனிப்பதை விடுத்து - அப்பாவி மக்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் தமிழகக் காவல்துறையை முழுமையாகப் பயன்படுத்திட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு காவல்துறைத் தலைவருக்கும், தலைமைச் செயலாளருக்கும் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சியாளர்கள் இன்று இருப்பார்கள்; நாளை போய் விடுவார்கள்; அது ஜனநாயக அரசியலின் சுழற்சி. ஆனால் காவல்துறை என்பது என்றைக்கும் மக்களின் உண்மை நண்பனாக - தமிழக மக்களின் உறுதிமிக்க பாதுகாவலனாக இருக்க வேண்டிய மிக முக்கியமான துறை. அந்தத் துறை, மக்கள் மத்தியில் நன்மதிப்பை இழந்து- நம்பிக்கையற்று, ‘நமக்கென்ன’ என்று நிற்பது, எதிர்காலத் தலைமுறைக்கு மட்டுமல்ல; அமைதியை விரும்பும் தமிழகத்திற்கே நிரந்தரமான ஆபத்தாக மாறிவிடும்.

ஆகவே, ஊரடங்கு காலத்தில் நடக்கும் கொலை, கொள்ளைகளைத் தடுக்கவும், மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திடவும் தமிழகக் காவல்துறை சட்டம் - ஒழுங்கு டிஜிபி உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும்.

காவல்துறை சீர்திருத்தம் குறித்து “பிரகாஷ் சிங்” வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு - அதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் ஆகியவற்றின் துணைகொண்டு, தமிழகக் காவல்துறையின் மாண்பினை உயர்த்தி, மதிப்புமிக்க காவல்துறை என்ற நிலையை உருவாக்கிட, எஞ்சியுள்ள சில மாதங்களுக்காவது “அதிமுகவினரின் குறுக்கீடுகள்” இன்றி காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட விட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x