Published : 18 Jul 2020 07:25 PM
Last Updated : 18 Jul 2020 07:25 PM
கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழுப் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதால், பலரும் சனிக்கிழமை அன்று அவசர அவசரமாகக் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கக் குவிகிறார்கள். இந்தச் சூழலில் வால்பாறையில் தொழிலாளர்கள் பொருட்களை வாங்கிக்கொள்ள ஏதுவாக சனிக்கிழமை மதியம் 2 மணியுடன் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்ப எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதித்துள்ளன.
வால்பாறையில் 52 எஸ்டேட்டுகள் உள்ளன. இவற்றில் தேயிலை, காபி, ஏலம், மிளகு ஆகியவை பயிரிடப்படுகின்றன. இவற்றில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். கரோனா பொதுமுடக்கத்தில் ஆரம்பத்தில் மூடப்பட்டிருந்த எஸ்டேட்டுகள், விவசாயத்திற்குப் பொதுமுடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிபந்தனைகளுடன் இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து ஜூலை மாதத்து ஞாயிற்றுக் கிழமைகளில் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில்தான், தொழிலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவை எஸ்டேட் நிர்வாகங்கள் எடுத்திருக்கின்றன.
வால்பாறையைச் சேர்ந்த தன்னார்வலர் பென்னி இது குறித்துக் கூறுகையில், “பொதுவாக எஸ்டேட்டுகளில் ஞாயிற்றுக்கிழமைதான் விடுமுறை தினமாக இருக்கும். அன்றைய தினம்தான் எஸ்டேட் மக்கள் நகரப் பகுதிகளின் கடைவீதிகளில் வந்து பொருட்கள் வாங்கிச் செல்வார்கள். இப்போது ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் என்பதால் கடைகள் இல்லை. இதனால் சனிக்கிழமையே பொருட்கள் வாங்க எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று இங்குள்ள வியாபாரிகள் சங்கமும், எஸ்டேட் தொழிற்சங்கங்களும் கோரிக்கை வைத்தன. அதை ஏற்றுக்கொண்டு பெரும்பான்மை நிர்வாகங்கள் சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்கே வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பத் தொழிலாளர்களுக்கு அனுமதியளித்துள்ளன” என்றார்.
இதுகுறித்து வால்பாறை வியாபாரிகள் சங்க நிர்வாகி எம்ஜேபி சாஜூவிடம் பேசியபோது, “எஸ்டேட் தொழிலாளர்கள் காலை 8 மணி தொடங்கி மாலை 5 மணி வரைக்கும் வேலை பார்ப்பவர்கள். பொதுமுடக்கத்தால் தினமும் மாலை 6 மணியோடு கடைகள் அடைக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு வேண்டும் என்று தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களிடம் கோரிக்கை வைத்தோம்.
அவர்கள் எஸ்டேட் நிர்வாகங்களிடம் பேசினார்கள், ஞாயிறு பொதுமுடக்கம் என்பதால் அன்றைக்கு வேலை வைக்க முடியாது. மீதி ஆறு நாட்களில் ஒரு நாள் விடுமுறை வழங்குவதும் சாத்தியமில்லை என்பதையெல்லாம் எஸ்டேட் நிர்வாகங்கள் பரிசீலித்தன. இறுதியில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் எஸ்டேட் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT