Published : 18 Jul 2020 06:39 PM
Last Updated : 18 Jul 2020 06:39 PM
பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம சுகாதாரச் செவிலியர் சங்கத்தினர் இரண்டு நாட்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.பரமேஸ்வரி, பொதுச் செயலாளர் பா.ராணி ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
''உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் எடுத்து வருகின்றன. அந்த வகையில் கரோனா பெரும் தொற்றைக் கண்டறிவது, தொடர் நடவடிக்கைகளை எடுப்பது, கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை தமிழகம் முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் கிராம சுகாதாரச் செவிலியர்கள் செய்து வருகின்றனர்.
பேறுகால முன், பின் கவனிப்பு, குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள கிராம சுகாதாரச் செவிலியர்களுக்குக் கரோனா பெரும் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, கிராம சுகாதாரச் செவிலியர்கள் அனைவருக்கும் என் 95 முகக்கவசம், கையுறை உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கிட வேண்டும்.
மேலும், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டிய நிலையில் உள்ள அனைத்து கிராம சுகாதாரச் செவிலியர்களுக்கும் தனிக் கவனத்துடன் சிறப்புச் சிகிச்சை வசதி செய்துதர வேண்டும் என தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அரசு சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துத்துறை இயக்குநர் மற்றும் அனைத்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர்களையும் தமிழ்நாடு கிராம சுகாதாரச் செவிலியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
எங்களது இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 21 மற்றும் 22-ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் உள்ள கிராம சுகாதாரச் செவிலியர்கள், அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு, கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்''.
இவ்வாறு அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT