Last Updated : 18 Jul, 2020 04:58 PM

 

Published : 18 Jul 2020 04:58 PM
Last Updated : 18 Jul 2020 04:58 PM

புதுச்சேரி அருகே ஏரியை மீட்டெடுக்க வேண்டி கிராம பொதுமக்கள் ஏரியில் தண்ணீரில் இறங்கி போராட்டம்

ஏரியை மீட்டெடுக்க வேண்டி ஏரியில் இறங்கி போராட்டம் நடத்தும் கிராம மக்கள்.

புதுச்சேரி

புதுச்சேரி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏரியை மீட்டெடுக்க வேண்டி கிராம பொதுமக்கள் ஏரியில் தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த சிவராந்தகம் பகுதில் பிரெஞ்ச் காலத்தில் அமைக்கப்பட்ட 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. மழைக்காலங்களில் கீழுர், மண்டகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வரும் உபரிநீர் வடிகால் வாய்க்கால் வழியாக சிவராந்தகம் ஏரிக்கு வருவது வழக்கம். இந்த ஏரி நிரம்பிய பின்னர் கோர்காடு ஏரிக்கு பாசன வாய்க்கால் வழியாக செல்லும்.

அப்போது, ஏரியை சுற்றியுள்ள 145 ஏக்கர் விவசாய நிலத்துக்கு இந்த தண்ணீர் பயன்பட்டு வந்தது. நாளடைவில் மழை பொய்த்து போனதால் ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது. தற்போது மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்பதுண்டு.

இதனிடையே, திடீரென அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர், "ஏரியில் உள்ள 3 ஏக்கர் நிலம் தனக்கு சொந்தமானது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது" என்று கூறி ஏரியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பனைமரங்களை வெட்டி சாய்து தீயிட்டு கொளுத்தியுள்ளார். மேலும், ஏரியின் கரைகளை சமன் செய்து ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுத்து வந்துள்ளார்.

இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் வருவாய்துறை, காவல்துறை, கொம்யூன் பஞ்சாயத்து உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், ஏரியை மீட்டெடுக்க வேண்டியும், அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்தும் இன்று (ஜூலை 18) அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஏரியின் உள்ளே தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இது சம்பந்தமாக பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, "பல ஆண்டுகளாக உள்ள எங்கள் ஊர் ஏரியை சமீப காலமாக தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வருகிறார். ஏரியில் இருந்த பழமையான பனைமரங்களையும் வெட்டி சாய்த்துவிட்டார். இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஏரி ஆக்கிரமிப்பை அரசு தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி முழுவதும் ஆளுநர் நீர்நிலைகளை ஆய்வு செய்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால், எங்கள் ஊர் எங்குள்ளது என்பது அவருக்கு தெரியாது. எனவே, இனிமேலாவது எங்கள் ஊர் ஏரியை ஆளுநர் கிரண்பேடி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ய துணைபோன அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை ஏற்ற அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x