Published : 18 Jul 2020 02:53 PM
Last Updated : 18 Jul 2020 02:53 PM
தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் பழங்கால குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை கிராமத்தில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தொல்லியல் களத்தில் பழங்கால பாறை கிண்ணங்கள், இடைக்கற்கால கருவிகள், கல்வட்டங்கள், இரும்புக் கருவிகளின் கழிவுகள், முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு மண்பாண்ட வகைகள், எடை கற்கள், செம்பினால் ஆன பொருள்களை கிடைத்தன.
இதனைத் தொடர்ந்து, சிவகளையில் முழுமையான அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தமிழக தொல்லியல் துறை சார்பில் சிவகளை பரம்பு பகுதியில் ரூ.31 லட்சம் செலவில் அகழாய்வு பணிகள் கடந்த மே 25-ம் தேதி தொடங்கியது. அகழாய்வு கள இயக்குநர் பிரபாகரன் மற்றும் அலுவலர் தங்கதுரை தலைமையில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வுp பணிகளில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் முழுமையாகவும், சேதமடைந்த நிலையிலும் கிடைத்துள்ளன.
இந்நிலையில் சிவகளை பகுதியில் பழங்கால மக்கள் வாழ்விடங்களை கண்டறிவதற்காக வயல்களுக்கு மத்தியில் உள்ள வலப்பான் பிள்ளை திரடு பகுதியில் அகழாய்வு பணியை கடந்த ஜூன் 28-ம் தேதி தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தொடங்கி வைத்தார்.
இங்கு தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது 5 மண்பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அதில் பழங்கால குறியீடுகள் காணப்படுகின்றன.
இது பழங்காலத்தில் பானைகளில் எழுதப்படும் கிராஃப்ஃபிட்டி (Graffiti) எனப்படும் தமிழ் கிறுக்கல் குறியீடுகள் ஆகும். இது தமிழ் பிராமி எழுத்துக்களுக்கு முந்தையது ஆகும். எழுத்துக்கள் உருவாகுவதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை. பெரும் கற்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த குறியீடுகளில் பல செய்திகள் இருக்கும். இதனை முழுமையாக ஆய்வு செய்தால் தான் அதன் பழமை தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT