Published : 18 Jul 2020 12:55 PM
Last Updated : 18 Jul 2020 12:55 PM
கரோனா தொற்றுள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்துதலில் உள்ள தாமதத்தைப் போக்கும்வகையில் 12 மணி நேரத்திற்குள் முடிக்கும் வகையில் ஒரு மேலாண்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் கரோனா விழிப்புணர்வு பைக் பிரச்சாரத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர்அளித்த பேட்டி:
''சென்னை மாநகராட்சியின் அனைத்துச் செயல்பாடுகளையும் அனைத்து சமூக வலைதளங்களிலும் பதிவிடுகிறோம். கடந்த 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் தினமும் 4,500 வரை கரோனா பரிசோதனை நடத்தி வந்தோம். அப்போது முதல்வர் அதை 12 ஆயிரம் வரை அதிகரிக்க உத்தரவிட்டார். அதையடுத்து அதை அதிகப்படுத்தி 7000, 8000 என 13,000 வரை இன்று தினமும் கரோனா பரிசோதனை செய்கிறோம். மார்ச் முதல் இன்றைய தேதி வரை 5 லட்சம் பிசிஆர் சோதனைகள் செய்துள்ளோம். அதைச் செய்த ஒரே மாநகராட்சி சென்னை மாநகராட்சி மட்டுமே.
இதனால் நல்ல முடிவுகள் வந்துள்ளன. சோதனை செய்யாமல் மறைப்பதால் இறப்பு எண்ணிக்கைதான் அதிகரிக்கும். 100 பேருக்கு நீங்கள் சோதனை செய்தால் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதுதான் பாசிட்டிவிட்டி சோதனை. அதில் ஆரம்பத்தில் நூற்றுக்கு 35 பேர் வரை வந்து கொண்டிருந்தது. நம்முடைய தொடர் முயற்சி, முழு ஊரடங்கு, தொடர் சோதனை காரணமாக 12 சதவீதம் என்கிற அளவுக்குக் குறைந்துள்ளது. ஊரடங்கில் எந்த நோய்த்தொற்று என்ன பிரச்சினை கொடுக்கிறது என்பதை வகைப்படுத்துகிறோம். நோய் அறிகுறி அறிய வீடு வீடாகச் சென்று கண்காணித்தது வருகிறோம். இதற்காக ஆயிரக்கணக்கான களப் பணியாளர்கள் பணியில் உள்ளனர்.
இதுதவிர காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் 11 லட்சம் பொதுமக்கள் இதுவரை முகாமில் கலந்து கொண்டுள்ளனர். நாளொன்றுக்கு 13000 பேருக்குச் சோதனை நடத்தப்படுகிறது.
நாங்கள் முக்கியமாகக் கையில் எடுத்தது தனிமைப்படுத்துதல் என்று சொல்லக்கூடிய முறை. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்துதலில் வைக்கிறோம். இதற்காக ரூ.40 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கியுள்ளார். இதில் 4,500 இளைஞர்கள் களப் பணியாளர்களாக உள்ளனர். இதுவரை 8.5 லட்சம் பேர் தனிமைப்படுத்துதலில் இருந்துள்ளனர். பலர் இருக்கிறார்கள், புதிதாக வருவார்கள், நாட்கள் முடித்தவர்கள் வீடு திரும்புவார்கள். இது ஒரு நடைமுறையாகத் தொடர்கிறது.
தனி நபர்கள் தனிமைப்படுத்துதலில் இதுவரை 5 லட்சம் பேர் இருந்துள்ளனர். சமீபகாலமாக தொற்று எண்ணிக்கை ஏன் குறைகிறது என்பது முக்கியமான காரணம். இதுபோன்ற நபர்கள் தனிமைப்படுத்துதலில் இல்லாமல் இருந்தால் பரவல் குறையும். அப்படி இல்லாமல் இருந்தால் ஒரு நபர் 20 நபர் வரை தொற்று பரவக் காரணமாக இருக்கிறார். இதையெல்லாம் ஆங்காங்கே முடக்கியதால் குறைந்தது. சர்வே, காய்ச்சல் முகாம், நோயாளிகளைக் கண்காணிக்கும் மேலாண்மை முறை காரணமாக தொற்றுள்ளவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துதலை விரைவுபடுத்தியதால் சாத்தியமானது.
இதற்காக ஒரு கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்தக் கண்காணிப்பு முறைக்கான பணி காலை 6 மணிக்கு ஆரம்பிக்கும். 8.30 மணிக்குள் தொற்றுள்ள நபர் எந்த வார்டு, தெரு, வீடு என்பதை அந்த ஏரியா ஆய்வாளருக்குக் கொடுத்து வாகனம் மூலம் ஸ்க்ரீனிங் சோதனைக்கு எங்கள் கட்டுப்பாட்டில் தொற்றுள்ளவரைக் கொண்டு வருவோம். அவருக்குத் தொற்று கண்டறியப்பட்டால் வாய்ப்பிருந்தால் வீட்டில் தனிமை, முடியாவிட்டால் கோவிட் சிறப்பு முகாம் அல்லது மருத்துவமனை என்று அனுமதிக்கிறோம்.
இந்த நடைமுறையில் முன்னர் நோயாளியை இவ்வாறு சிகிச்சையில் சேர்க்க 2 நாள் வரை ஆகும் நிலை இருந்தது. பின்னர் 6 மணி நேரம், 7 மணி நேரமாக இருந்தது. தற்போது இதை 3 மணி நேரத்திற்குள் நடக்கும் வகையில் கொண்டு சென்றுள்ளோம். இது மிக மகிழ்ச்சியான ஒரு விஷயம். இதற்காக பல மருத்துவர்கள் மூத்த மருத்துவர்கள் சிறப்பு பணியமர்த்துதல் மூலம் அமர்த்தப்பட்டுள்ளனர்.
காலை 7 மணிக்குள் வேலைகளைத் தொடரும்படி வேலை நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன, எங்கள் கணிப்பின்படி 8-ல் இருந்து 10 சதவீதமாக தொற்று எண்ணிக்கையைக் கொண்டுவருவோம். 5 சதவீதம் என்பதை நோக்கிச் செல்கிறோம். அதை விரைவில் அடைவோம். 5 லட்சம் சோதனை என்பது மிகப்பெரிய எண்ணிக்கை. ஒரு லட்சம் பேரில் 6,300 பேருக்குச் சோதனை செய்துள்ளோம்.
தோராயமாக இதுவரை 400 கோடி ரூபாய் வரையில் செலவாகியிருக்கலாம். கோவிட் கேர் சென்டர் உள்ளது. தொற்று இரட்டிப்பாகும் நாட்கள் சென்னை மாநகராட்சியைப்பொறுத்தவரை கிட்டத்தட்ட 47 நாட்கள் ஆகிறது. சில அதிகம் உள்ள மண்டலங்களில் 90 நாட்களுக்கு மேல் ஆகிறது. அந்த அளவுக்கு முயற்சி எடுத்துள்ளோம்.
தேசிய அளவில் 21 நாள், நாம் 45 நாட்களாக அதிகரித்துள்ளோம். அது கவனிக்கத்தக்க ஒன்று. குடிசைப்பகுதிகளில் சிறு சிறு குழுக்களாகப் பிரித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தோம். துவைத்துப் பயன்படுத்தும் முகக்கவசங்களை 26 லட்சம் மக்களுக்கு தலா 2 வீதம் 52 லட்சம் அளவில் கொடுத்தோம்.
சென்னையில் 85,90 சதவீதம் முகக்கவசம் அணியாமல் இருந்திருந்தால் 10 ஆயிரம் பேர் தினம் தொற்றால் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கும். ஆனால், மக்கள் அதைக் கடைப்பிடித்ததாலும், விழிப்புணர்வுப் பிரச்சாரத்தாலும் இன்று ஆயிரம் என்கிற எண்ணிக்கையில் குறைந்துள்ளது. ஆகவே தடுப்பு நடவடிக்கைகள் மிக முக்கியம்.
ஆகவே சிறப்பான மேலாண்மை மிக முக்கியம். பாதுகாப்பு வளையத்தைப் பலப்படுத்த வேண்டும். தளர்வு கொடுக்கும் நேரத்தில் பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 4 மாதங்களுக்கு இதைக் கடைப்பிடித்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்''.
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT