Published : 18 Jul 2020 11:52 AM
Last Updated : 18 Jul 2020 11:52 AM
எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது என, பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரியாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (ஜூலை 17) அதிகாலை அந்தச் சிலை மீது காவி நிறச் சாயம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர். காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையில் இருந்த காவி நிறச் சாயம் அழிக்கப்பட்டு, சிலை தூய்மைப்படுத்தப்பட்டது.
இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை பாரத் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் (21) என்ற இளைஞர் இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில், பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (ஜூலை 18) தன் ட்விட்டர் பக்கத்தில், "எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது" என தமிழில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனை களங்கப்படுத்த முடியாது
No amount of hate can ever deface a giant. pic.twitter.com/Y5ZBNuCfl2— Rahul Gandhi (@RahulGandhi) July 18, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT