Last Updated : 26 Sep, 2015 02:29 PM

 

Published : 26 Sep 2015 02:29 PM
Last Updated : 26 Sep 2015 02:29 PM

திருச்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 1,900 ஏழைகளின் வீடுகளுக்கு இலவச கழிப்பறை வசதி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருச்சி மாநகரில் 1,900 ஏழைகளின் வீடுகளுக்கு இலவச கழிப்பிடம் கட்டித்தர மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

திருச்சி மாநகரில் பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக பொன்மலை, கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம், ரங்கம் ஆகிய 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதியில் 292 இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 78 இடங்களில் குளியலறை, கழிப்பறையுடன் கூடிய பொதுசுகாதார வளாகங்கள், 19 இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகள், 10 இடங்களில் நம்ம டாய்லெட் திட்ட கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் உட்பட 19 இடங்களில் கட்டண கழிப்பிடங்கள் அமைத்து தரப்பட்டுள்ளன. எனினும் சாலையோரங்களில் மலம் கழிக்கும் நிலையை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.

இதை தவிர்ப்பதற்காக திருச்சியில் கழிப்பறை இல்லாத வீடுகள், திறந்தவெளியில் மலம் கழிக்கப்படும் பகுதிகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 1,900 வீடுகளில் போதிய அளவு இடவசதி இருந்தும், அங்கு கழிப்பிடம் கட்டப்படாமல் இருந்தது தெரியவந்தது. இந்த வீடுகளுக்கு மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இலவச கழிப்பிடங்களைக் கட்டித்தர மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, அதிகளவிலான பொதுக்கழிப்பிட வசதிகளை அமைத்து கொடுத்து திருச்சி மாநகராட்சி தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது. இதனால்தான் நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சிக்கு 2-வது இடம் கிடைத்தது. வரும் ஆண்டு, இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் சுகாதாரப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக 1,900 வீடுகளுக்கு இலவசமாக கழிப்பிடம் கட்டித்தரப்பட உள்ளது. இவை அனைத்தும் மிகுந்த வறுமையில் வாடும் ஏழைகளின் வீடுகள். இதுதவிர தனித்தனியாக கழிப்பிடம் கட்டுவதற்கு இடம் இல்லாத வகையில், வீடுகள் நெருக்கமாக அமைந்திருக்கும் குடிசைப் பகுதிகளில் கூடுதல் பொதுக்கழிப்பிட வசதி செய்து தர உள்ளோம். இத்திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் விஜயலட்சுமி, பொறியாளர் நாகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். விரைவில் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும்” என்றனர்.

11 பொதுக்கழிப்பிடங்கள் விரிவாக்கம்

திருச்சி மாநகரில் அரியமங்கலம் ஜோதி நகர், பிச்சை நகர், பாப்பாக்குறிச்சி, கே.சாத்தனூர், ஓயாமரி உட்பட 11 பகுதிகளில் இன்றளவும் பொதுமக்கள் திறந்தவெளியில், குறிப்பாக சாலையோரங்களில் மலம் கழித்து வருவது கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதையடுத்து இந்த 11 பகுதிகளிலும் பொதுக்கழிப்பிட வசதிகளை விரிவுபடுத்திக் கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x