Published : 18 Jul 2020 07:29 AM
Last Updated : 18 Jul 2020 07:29 AM

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படமாட்டாது- முதல்வர் பழனிசாமி தகவல்

ஈரோடு

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படமாட்டாது என ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ரூ.151 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப்பணிகளைத் திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவையில் பெரியாரின் சிலையை யார் சேதப்படுத்தினார்களோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்வதில் எந்த குளறுபடியும் இல்லை.

கரோனா வைரஸ் தொற்று காலக்கட்டத்தில் மின்சாரத் துறையில் இருக்கின்ற ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கிட முடியாது என்று தெரிவித்து விட்டனர். இதனடிப்படையில்தான் நான்கு மாதமாக இணைத்து கணக்கீடு செய்யப்பட்டது.

பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று இரண்டு விதமாக பிரிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றமும் ஏற்றுள்ளது. திமுகவினர் வேண்டுமென்றே ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக, போராட்டம் நடத்துகிறார்கள்.

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவோரில் மருத்துவப் பணியில் இருந்து இறந்தால் ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் வாரிசுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காவல், உள்ளாட்சி போன்ற மற்ற துறை சார்ந்தவர்கள் இறக்கும் போது ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

எடப்பாடி மாவட்டம் இல்லை

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்த்து எடப்பாடி மாவட்டம் உருவாகும் என்ற தகவல் தவறானது. தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கை கூடுதல் நாட்களுக்கு அமல் படுத்தும் எண்ணம் தற்போதுவரை அரசுக்கு இல்லை.

விளைநிலங்களில் குழாய் பதிப்பது போன்ற திட்ட பணிகளுக்கு ஏற்கெனவே 10 சதவீதம்தான் விவசாயிகளுக்கு நில இழப்பீடு வழங்கப்பட்டது. தற்போது 100 சதவீதம் இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகு அந்த நிலத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தில் ஐடிபிஎல் திட்டம் விவசாயிகள் அனுமதியோடுதான் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x