Published : 17 Jul 2020 08:09 PM
Last Updated : 17 Jul 2020 08:09 PM
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஒரே சமயத்தில் வட்டாட்சியர், ஒன்றிய அலுவலகங்களை கிராமமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளையான்குடி அருகே நெஞ்சகத்தூர் ஊராட்சி கண்டனி கிராமத்தில் பொதுமயானத்துக்கு பாதை இல்லை. இதனால் தனியார் நிலத்தில் பாதை அமைத்து சடலங்களை மயானத்துக்கு எடுத்துச் செல்கின்றனர்.
இதனால் அவ்வப்போது இருத்தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனால் மயானத்திற்கு அரசு சார்பில் பாதை அமைத்துத் தர வலியுறுத்தி கண்டனி கிராமமக்கள் இன்று இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் போலீஸார் மயானத்துக்கு விரைவில் பாதை அமைத்துத் தரப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
அதேசமயத்தில் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வழக்காணி கிராமமக்கள் முற்றுகையிட்டனர். வழக்காணி கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தில் காக்கூரணி பொட்டல் ஊரணியை தூர்வாரியபோது டிராக்டர்களில் மண்ணை கடத்தினர்.
இதையடுத்து டிராக்டர்களையும், ஜேசிபி இயந்திரத்தையும் கிராமமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் வாகனங்களை விடுவித்தனர். இதைக் கண்டித்து கிராமமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி தலைமை வகித்தார்.
வட்டாட்சியர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பர்ணபாஸ் அந்தோணி, ராஜேஸ்வரி மண் கடத்திலேயார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். இரண்டு போராட்டங்களும் ஒரே சமயத்தில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT