Published : 17 Jul 2020 07:44 PM
Last Updated : 17 Jul 2020 07:44 PM
கடந்த சில நாட்களாக நாகை மாவட்டத்தின் கடலோர கிராமங்களை கடும் பதற்றத்துக்கு உள்ளாக்கியிருந்த சுருக்குமடி வலை விவகாரம் சுமுகத் தீர்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
நாட்டார் என்ற ஒரு தலைமையின் கீழ் கட்டுப்பாடாக இருந்த மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலை, இரட்டை மடிவலை என்ற அரக்கன்கள் உள்ளே புகுந்ததில் இருந்து இரண்டுபட்டுப் போயின. சுருக்குமடி வலைகள் வைத்திருப்பவர்கள் ஒரு பக்கமும், இதர மீனவர்கள் ஒரு பக்கமுமாகப் பிரிந்து தங்களுக்குள் மோதிக் கொண்டனர். இதனால் கடலோர கிராமங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
கடந்த 2008-ம் ஆண்டு முதலே சுருக்குமடி வலைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டுவந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு சுருக்குமடி மற்றும் இரட்டை மடி வலைகளைத் தடை செய்துவிட்டது. ஆனால், இந்த வலை மற்றும் அதற்கான பெரிய படகு என ஒவ்வொரு மீனவரும் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இதற்காக முதலீடு செய்திருப்பதாக அரசிடம் முறையிட்டனர். அதனால் மூன்று வருடம் வரை விலக்கு அளிக்கப்பட்டு அந்த காலகட்டம் வரையிலும் சுருக்கு மடி, இரட்டை மடி வலையைப் பயன்படுத்திக் கொள்ள அதிகாரபூர்வமற்ற முறையில் அனுமதியும் வழங்கப்பட்டது.
ஆனால், அந்த கெடு முடிந்த பின்னரும்கூட மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மீன்வளத் துறை அனுமதியின்றி இன்று வரையில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வலை, கடலின் அடி ஆழம் வரையிலும் சென்று ஒட்டுமொத்தக் கடல் வளத்தையும் வாரிக் கொண்டு வந்துவிடும் என்பதால் மற்ற சிறு படகுக்காரர்களுக்கு மீன்கள் எதுவும் கிடைக்காது. அதனால் அவர்கள் சுருக்கு மடி வலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றமும் தடைவிதித்தது. ஆனாலும் சுருக்கு மடி வலை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுத்தான் வருகிறது. இதற்கு மற்ற மீனவர்கள் எதிர்ப்புக் காட்டும் இடங்களில் கலவரம் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிறிய படகு மீனவர்கள் சுருக்கு மடி வலைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் அந்த வகை வலையை வைத்துள்ள மீனவ கிராமங்களில் கலவரம் மூளும் நிலைமை ஏற்பட்டது. பழையார் கிராமத்தில் இரண்டு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. திருமுல்லைவாசல் - கீழமூவர்கரை கிராமங்களுக்கு இடையே மோதல் வெடித்தது.
இந்த பதற்றமான நிலையில் மீன் வளத்துறையும் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று பிடியை இறுக்கியது. அதையும் மீறி அந்த வலையை மீனவர்கள் பயன்படுத்தினார்கள். இதையடுத்து சுருக்கு மடி வலை பயன்படுத்துவதைத் தடை செய்ய வலியுறுத்தி தரங்கம்பாடியில் 22 கிராம மீனவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர்.
இதற்கு எதிராக சுருக்குமடி வலைக்காரர்களும் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. மறுநாள் மாவட்டம் முழுவதும் சுருக்குமடி வலைக்காரர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அதற்கு எதிர்ப்பாக மற்ற வலை மீனவர்களும் போராட்டம் நடத்தினர். இரண்டு தரப்பினரையும் தனித்தனியாக நேரில் சந்தித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரவீன்.பி.நாயர் ஒரு வாரத்தில் இது குறித்து அரசிடம் தெரிவித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.
தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சுருக்கு மடி மற்றும் இரட்டை மடி வலைகள் வைத்திருப்போர் அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று மீனவர்களைக் கேட்டுக் கொண்டார். அவர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் மாற்றுத் திட்டங்கள் அரசிடம் தயாராக இருப்பதாகவும், அதனை பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனை ஏற்று முதல் கட்டமாக நாகை சுற்றுவட்டப் பகுதியில் உள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று ஒன்றுகூடிப் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களுக்குள் ஒரு சுமுக முடிவு எட்டப்பட்டதை அடுத்து இன்று நாகை மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த மீனவ கிராமங்களையும் அழைத்து நாகையில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதில் கலந்துகொள்ள 55 மீனவ கிராமங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. மீதமுள்ள ஐம்பது கிராமங்களில் 35 கிராமங்கள் சுருக்குமடி வலைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர். 12 கிராமங்கள் ஆதரவாகக் கருத்து தெரிவித்து வலையைக் கைவிடப் போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இரண்டு கிராமத்தினர் சுருக்கு மடி வலையைக் கைவிட முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கிராமம் நடுநிலை வகித்தது.
இதனால் எவ்வித முடிவும் எட்டப்படாமல் கூட்டம் கலைந்தது. ஆனாலும் முன்பு இருந்த மோதல் போக்கு மறைந்து பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது முதல்கட்ட வெற்றி என்று சொல்லும் மீனவர்கள், இந்த பிரச்சினைக்கு விரைவில் சுமுகத் தீர்வு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT