Published : 17 Jul 2020 04:13 PM
Last Updated : 17 Jul 2020 04:13 PM
நீலகிரி மாவட்டத்தில் நகரங்களை விட கிராமங்களில் கரோனா பரவி வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சீனாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்ததும், தமிழகத்திலேயே முதன்முதலாக நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் மாதம் 17-ம் தேதி முதல் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் வெளியேற 24 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டது.
இதனால், தமிழகத்தில் கரோனா கண்டறியப்பட்டும் நீலகிரி மாவட்டத்தில் தொற்று கண்டறியப்படவில்லை. முதன் முறையாக டெல்லி சென்று திரும்பிய 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் குடும்பத்தினர் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், இவர்கள் வசித்து வந்த பகுதிகள் முழுமையான கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. உதகை காந்தல், கோத்தகிரி, எஸ்.கைக்காட்டி மற்றும் குன்னூர் ராஜாஜி நகர் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.
இப்பகுதி மக்கள் யாரும் வெளியில் நடமாடாமல் கட்டுபாட்டுடன் இருந்தனர். நோயாளிகளும் குணமாகி வீடு திரும்பினர். இதன் பின்னர் மாவட்டத்தில் வைரஸ் பரவல் வெகு நாட்கள் இல்லாமல் பாதுகாப்பு மண்டலமாக மாறியது.
தளர்வுகளால் பரவல்
கடந்த 33 நாட்களில் மட்டும் புதிதாக 306 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜூலை 16) வரை மொத்தம் 320 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், உதகை ஸ்டேட் வங்கி ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வங்கி மூடப்பட்டது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதே போல, உதகையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக துணை மண்டல மேலாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த அலுவலகம் மூடப்பட்டு, ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு மாதங்கள் விடுமுறையில் இருந்த துணை மண்டல மேலாளர் பணியில் மீண்டும் சேர்ந்த நாளில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே குன்னூரில் ஒரு மருத்துவருக்கு தொற்று ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிராமங்களில் பரவல்
கரோனா வைரஸ் குறித்த செய்திகள் வெளியானதும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் தனிமைப்படுத்திக்கொண்டன. கிராமங்களுக்குள் வெளியாட்கள் யாரும் வர கூடாது என தடுப்புகள் ஏற்படுத்தியும், விளம்பரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் கிராமங்களில் சுக, துக்க நிகழ்வுகளில் மக்கள் கூடினர். குறிப்பாக தங்காடு, ஓரநள்ளி பகுதியில் நடைபெற்ற திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. எவ்விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றாமலும், பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமலும் திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.
மேலும், வழக்கமான நாட்களை போல் அதிகளவிலான நபர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தங்காடு ஓரநள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால் முள்ளிகூர், எப்பநாடு உட்பட்ட கிராம பகுதிகள் நோய்களை உருவாக்கும் 'கிளஸ்டர்'களாக உருவாகியுள்ளன.
இக்கிராமங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
விஏஓ சஸ்பெண்ட்
இந்த சூழலில் குந்தா வட்டத்துக்குட்பட்ட தங்காடு, ஓரநள்ளியில் ஊரடங்கை மீறி நடந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்றததால் தான் கரோனா பரவல் அதிகரித்ததாக புகார் எழுந்தது. இருப்பினும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீது இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டின் அடிப்படையில் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தர தவறிய கிராம நிர்வாக அலுவலர் ஐய்யப்பனை ஆட்சியர் உத்தரவின் பேரில் உதகை கோட்டாட்சியர் சுரேஷ் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
தங்காடு, ஒரநள்ளியில் நோய் பரவுவதற்கு காரணமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளவர்கள் உட்பட பலர் கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT