Published : 17 Jul 2020 03:54 PM
Last Updated : 17 Jul 2020 03:54 PM
தமிழக முதல்வரின் ஆய்வுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிப்பு செய்த மாவட்ட ஆட்சியரை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து திமுக எம்எல்ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழக முதல்வரின் ஆய்வுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிப்பு செய்ததாக கூறி, இன்று (ஜூலை 17) திமுக எம்எல்ஏக்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், தளி பிரகாஷ், வேப்பனப்பள்ளி முருகன், ஓசூர் சத்யா ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து ஆட்சியர், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தட்டிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராடத்தினை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை பிரபாகரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் கடந்த 15-ம் தேதி வருகை தருவதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கரோனா நோய் தடுப்பு பணிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருடன் சந்திப்பு, ஓசூர் மலர் ஏல மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக பத்திரிகை வாயிலாக தெரிந்தது.
திமுக சார்பில் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், 5 ஒன்றிய குழு தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாவட்ட தேவைகள் குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கலாம் என காத்திருந்தோம். எங்களது எண்ணங்களுக்கு மாறாக மாவட்ட ஆட்சியரான தாங்கள், எங்களை அழைக்கவும் இல்லை, மதிக்கவும் இல்லை, புறக்கணித்துள்ளீர்கள்.
அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் அனுமதித்து ஜனநாயக விரோத போக்கை செய்துள்ளீர்கள். இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமில்லாமல், மக்கள் பிரதிநிதிகளை உதாசீனப்படுத்தி அதிமுகவுக்கு சார்பாக நடந்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது.
தொடர்ந்து எல்லா ஆய்வுக் கூட்டங்களிலும் எங்களுக்கு அழைப்பு தராமல் புறக்கணிப்பது, எந்த அரசு பொறுப்பிலும் இல்லாத அதிமுகவினரை வைத்து அரசு விழா நடத்துவது, எம்எல்ஏக்களாகிய நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் தரும் மனுக்களுக்கு உரிய பதில் கூட தராமல் இருப்பது உள்ளிட்டவை தொடர்கின்றன.
தலைமை செயலாளருக்கு மனு கொடுத்தால் எங்களுக்கு உடனே பதில் வருகிறது. ஆனால், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தால் உதாசீனப்படுத்துவது உள்ளிட்ட ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுவது நல்ல நிர்வாகத்திற்கு உகந்தது அல்ல என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்து, உரிய நடவடிக்கையில் இறங்கி அனைவருக்கும் பொதுவானவராக நடந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்"
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT