Published : 17 Jul 2020 03:37 PM
Last Updated : 17 Jul 2020 03:37 PM

கட்டண நிர்ணயம்; தனியார் பள்ளிகள் ஜூலை-20 முதல் விண்ணப்பிக்கலாம்: தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு அறிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகள், கட்டண நிர்ணயம் செய்வதற்குரிய விண்ணப்பங்களை வரும் 20-ம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிப்பது சம்பந்தமாக பிரச்சினை எழுந்தது. இதையடுத்து கட்டணத்தை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த கட்டண நிர்ணயக் குழு தலைவராக பாலசுப்பிரமணியம் ஜூலை 1-ம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.

தற்போது தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் செய்யும் பணியினை குழு தொடங்கியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "அனைத்து அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் தங்களுக்குரிய கல்விக் கட்டணத்தை அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கு நிர்ணயம் செய்ய (2020 -21, 2021 -22 , 2022 -23)உரிய விபரங்களுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் 2019-20-ம் கல்வி ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படாது. தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான விண்ணப்பங்களை ஜூலை 20-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 25-ம் தேதிக்குள் அளிக்கவேண்டும். இதற்காக tnfeecommittee.com என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தனியார் பள்ளிகள் நேரடியாகவும் விண்ணப்பங்களை கல்விக் கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்பலாம். விண்ணப்பங்களை செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். அதன் பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. என்று முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x