Published : 17 Jul 2020 02:52 PM
Last Updated : 17 Jul 2020 02:52 PM

கரோனா உயர்தர சிகிச்சைக்கு ரூ.76.55 கோடி மதிப்பில் அதிநவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள்; கொள்முதல் ஆணை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவு

அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்

சென்னை

கரோனா உயர்தர சிகிச்சைக்கு ரூ.76.55 கோடி மதிப்பில் அதிநவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகளை வாங்க கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜூலை 17) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக அரசு, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில், கரோனா தடுப்பு மற்றும் மேலாண்மை பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கரோனா தொற்றுடன் நுரையீரல் பாதிப்பு உள்ள நோயாளிகளின் உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக தமிழ்நாடு முதல்வர் ஏற்கெனவே, ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முதல்வர் இப்பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகளை (High Flow Nasal Canula) கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் ரூ.76.55 கோடி மதிப்பீட்டில் 2414 கருவிகளை வாங்குவதற்கு கொள்முதல் ஆணை பிறப்பித்து, இதுவரை 530 கருவிகளை தருவித்துள்ளது.

பொதுவாக, சுவாசக்கோளாறு உள்ள நோயாளிகளுக்கு தேவைப்படும் போது குழாய்கள் ஆக்சிஜன் வழியாக வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் ஆக்சிஜன் அதிகபட்சமாக ஒரு நிமிடத்திற்கு 12 லிட்டர் வரை மட்டுமே வழங்க இயலும். கரோனா நோயாளிகளுக்கு உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவி மூலம் அதிகபட்சமாக ஒரு நிமிடத்திற்கு 60 லிட்டர் ஆக்சிஜன் வழங்க இயலும். இக்கருவி மூலம் உயர் ஓட்ட ஆக்சிஜன் வழங்கும் போது நோயாளிகளுக்கு ஏற்படும் தீவிர மூச்சுத் திணறல் குறைந்து நுரையீரல் பாதிப்பினையும் தடுக்க முடிகிறது. மேலும், பாதிப்புக்குள்ளான நுரையீரல் வெகுவிரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப ஏதுவாகிறது.

கூடுதலாக, நோயாளிகள் இக்கருவியை தேவைப்படும்போது தானாகவே பொருத்திக்கொள்ளவும் அகற்றவும் முடியும். உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் நிறுவனமும் பரிந்துரைத்துள்ள இக்கருவியை கையாளுவதற்கு மருத்துவர்களுக்கோ செவிலியர்களுக்கோ சிறப்பு பயிற்சி தேவையில்லை.

இக்கருவி தேவையின் அடிப்படையில் படிப்படியாக மேலும் தருவிக்கப்படும். இதுபோன்ற உயர்தர அதிநவீன கருவிகளை மேலை நாடுகளிலிருந்து தருவித்து கரோனா சிகிச்சைக்காக அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படுத்துவதால் தமிழ்நாடு முன்னனியில் உள்ளது. தமிழ்நாடு முதல்வரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் பணிகள் மேலும் கரோனா சிகிச்சைக்களை தீவிரப்படுத்தி விலை மதிப்பற்ற உயிர்களை காப்பதற்கு பேருதவியாக அமையும்"

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x