Published : 17 Jul 2020 02:06 PM
Last Updated : 17 Jul 2020 02:06 PM
சுந்தராபுரத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (ஜூலை 17) வெளியிட்ட அறிக்கை:
"கோவை மாவட்டம், சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மிக வன்மையாக கண்டிக்கிறது.
கோவை - பொள்ளாட்சி சாலையில் உள்ள சுந்தராபுரத்தில் இருக்கும் பெரியார் சிலை மீது சில சமூக விரோதிகள் இன்று அதிகாலை காவி சாயத்தை ஊற்றி அவமதித்துள்ளனர்.
பெரியார் சிலையை அவமதிப்பதன் மூலம் அவர் முன்னெடுத்த கொள்கை வழி பயணத்தை ஒரு போதும் தடுத்து நிறுத்த முடியாது.
கொடிய கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். இந்த நோய் பெருந்தொற்றை மத்திய, மாநில அரசுகள் கட்டுக்குள் கொண்டு வருவதில் படுதோல்வியை சந்தித்து வருகின்றன.
கடந்த நான்கு மாதங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்க்கை பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையிலேயே சிலை அவமதிப்பு செயல் நடந்துள்ளது.
பெரியார் சிலை அவமதிப்பு சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது எதேச்சையானது அல்ல. மதவெறி, சாதி வெறிக் கும்பல்கள் மூடப்பழக்கவழக்கங்களில் மூழ்கிக் கிடப்பவர்கள் திட்டமிட்டு மேற்கொள்கிற தாக்குதலாகும்.
பெரியார் தமிழ் மக்களுக்கு மட்டும் அல்ல, உலக அளவிலான சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி தலைவர் ஆவார். பகுத்தறிவு சமுதாயம் அவரது சிந்தனைகளை, செயல் அனுபவங்களை கைவிளக்காக பயன்படுத்தி இயங்கி வருகின்றன என்பதனை அறிவு சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இனியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்கான முறையில் சுந்தராபுரம் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது"
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT