Published : 17 Jul 2020 01:47 PM
Last Updated : 17 Jul 2020 01:47 PM

பெரியார் சிலை அவமதிப்பு: குற்றவாளிகளைக் கைது செய்க; திருமாவளவன்

தொல்.திருமாவளவன்: கோப்புப்படம்

சென்னை

பெரியார் சிலையை அவமதித்தவர்களைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தொல்.திருமாவளவன் இன்று (ஜூலை 17) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும், வன்முறையைத் தூண்டும் நோக்கத்தோடும் கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றி அவமதித்துள்ளனர். அந்த சனாதனப் பயங்கரவாதிகளைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கோவை பகுதியில் கடந்த பல மாதங்களாகவே மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சமூகப் பதற்றத்தை உண்டுபண்ணும் நோக்கத்தோடும் தொடர்ந்து சனாதனப் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். கடந்த மே மாதத்தில் இந்து வழிபாட்டுத் தலங்களின் முன்பு பன்றி மாமிசத்தை வீசி சிறுபான்மையினருக்கு எதிராகக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்த ஹரி என்ற ராம்பிரகாஷ் என்பவர் பிடிபட்டார்.

ஆனால், அவர் எந்த மத அமைப்பையும் சேர்ந்தவரல்ல என காவல்துறை நற்சான்றிதழ் வழங்கி அவருக்கு பின்னால் இருந்த சனாதனப் பயங்கரவாத அமைப்பைக் காப்பாற்றிவிட்டது. அத்தகையோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. அதனால் ஊக்கம் பெற்ற சனாதன பயங்கரவாதக் கும்பல் இப்பொழுது பெரியார் சிலையை அவமதித்துள்ளது.

திருக்குறளைப் படிக்க சொன்னதற்காக அவசர அவசரமாக பிரதமருக்குப் பாராட்டு தெரிவிக்கும் தமிழக முதல்வர், இந்த நாட்டில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தலைநிமிர்ந்து வாழ வழி வகுத்த பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து இதுவரை வாய் திறக்காதது வியப்பும் வேதனையும் அளிக்கிறது.

பாஜகவினர் புகார் சொன்னால் பாய்ந்து சென்று நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, பெரியார் சிலையை அவமதித்தவர்களை இதுவரைக் கண்டுபிடித்து கைது செய்யாதது காவல்துறையின் மீதும் காவி சாயம் ஊற்றப்பட்டிருக்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இந்தப் பிரச்சினையில் வழக்கம்போல அலட்சியமும் அமைதியும் காக்காமல் உடனடியாகத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளைப் பயங்கரவாதிகளாகக் கருதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்"

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x