Published : 17 Jul 2020 07:35 AM
Last Updated : 17 Jul 2020 07:35 AM
ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு, சேலத்தில் மக்கள் வீடுகளில் தேங்காய் சுட்டு, விநாயகருக்கு படையலிட்டனர்.
ஆடி மாதம், அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் இம்மாதம் முழுவதுமே பண்டிகை கொண்டாட்டமாக இருக்கும். ஆடி மாதப் பிறப்பினை, தேங்காய் சுட்டு கொண்டாடும் வழக்கம் சேலம்,நாமக்கல், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் உள்ளது.
மகாபாரத யுத்தம் தொடங்கிய நாளான ஆடி 1-ம் தேதி தர்மம் வென்றிட வேண்டி, விநாயகர் மற்றும் குலதெய்வங்களுக்கு, தேங்காய் சுட்டு படையலிட்டு வழிபாடு நடத்துவர். இதன் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில் ஆடி மாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
புதிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நார்களை அகற்றிவிட்டு ஓடு மெலிதாகும் அளவுக்கு அதை தரையில் தேய்த்து, அதன் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருந்த தேங்காய் தண்ணீரை வெளியேற்றி, துளையின் வழியாக பச்சரிசி, பாசி பருப்பு, நாட்டு சர்க்கரை , அவல், எள், ஏலக்காய் கலந்த கலவையை இட்டு, முனை கூராக சீவப்பட்ட நீண்ட அழிஞ்சி மரக்குச்சியில் தேங்காயை செருகி, குச்சி, தேங்காய் மீது மஞ்சளை பூசி தீயிலிட்டு சுட்டனர்.
சுடப்பட்ட தேங்காய்யை குச்சியுடன் எடுத்து சென்று விநாயகருக்கு முன்பு நிறுத்தி, உலகில் நன்மைகள் செழித்தோங்கவும், தீமைகள் அழிந்திட வேண்டும் எனவும் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
மேலும், பருவகால மாற்றம் ஏற்படும் ஆடி மாதத்தில், தீயில் சுடப்பட்ட தேங்காய் சாப்பிடுவதன் மூலம் உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு, ஆரோக்கியம் பெருகும் என்ற முன்னோர்களின் பாரம்பரியத்தை, மக்கள் இன்றளவும் கடைபிடித்து, உற்சாகம் பொங்க வீடுகளில் ஆடிப் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT